அ.தி.மு.க.வுக்கு வெற்றிக்குப் பெண்கள் படை..! எடப்பாடி பழனிசாமி பலே திட்டம்.

அனைத்து கட்சிகளும் தேர்தல் பரபரப்பில் இருந்துவருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 20 ம் தேதி மாலை சென்னை அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்றது.


கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வர் வேட்பாளருமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இந்த தேர்தலில் நமது ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுவோம். குறிப்பாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதகிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்து அரசுப் பள்ளி மாணவர்களை மருத்துவர்களாக்கியிருக்கிறோம்.

இந்த சாதனையை போல அரசின் குடிமராமத்து திட்டம், நீர் திட்டங்கள் என்று மக்களிடம் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லுவோம். மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்று நமக்கு நம்பிக்கையிருக்கிறது. மாணவர்கள், பெண்கள் இந்த இருவரையும் நாம் சென்று சேர வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் பாசறை கூட்டத்தை நடத்தி அடுத்து பெண்கள் மத்தியில் நமது பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் ஒவ்வொரு பூத்துக்கும் 25 பெண்களை நியமனம் செய்யவேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் மட்டும் சுமார் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் பெண்களை நியமனம் செய்யும்போது, அந்த குடும்பத்தின் வாக்குகளும் வந்துவிடும், எளிதில் வெற்றிபெறலாம் என்று கணக்குப் போட்டுள்ளார்.