என்ன டிரஸ் போட்ருக்க..? ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் பெண்ணுக்கு சென்னை ஆர்டிஓவிடம் கிடைத்த விபரீத அனுபவம்!

அநாகரீக முறையில் உடையணிந்து வந்த பெண்களுக்கு ஓட்டுநர் உரிமை தேர்வை நிர்வாகி ஒருவர் நடத்தாமல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னை மேற்கு கேகே நகர் பகுதியில் ஓட்டுநர் உரிமம் அலுவலகம் அமைந்துள்ளது. தினந்தோறும் ஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வை பல்லாயிரக்கணக்கானோர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக ஓட்டுனர் உரிமம் பெற தேர்வுக்கு வருபவர்கள் அநாகரீகமாக உடை அணிந்து வருவதாக கூறப்படுகிறது. 

இதனை தடுப்பதற்காக ஊழியர் ஒருவர் பெண்களின் உடைகளை சரிபார்த்து பின்னரே தேர்வுக்கு அனுமதிக்கிறார். பவித்ரா என்ற ஐடி ஊழியர் ஜீன்ஸ் மற்றும் கையில்லாத டாப்ஸ் அணிந்து சென்றுள்ளார். அப்போது ஊழியர் ஒருவர் அவருடைய உடை மாற்றி வந்து தேர்வு எடுக்குமாறு கூறியுள்ளார். பவித்ராவுக்கு உடனடியாக ஓட்டுனர் உரிமம் தேவைப்பட்டதால் அவசர அவசரமாக வீட்டிற்கு சென்று உடைமாற்றி வந்துள்ளார்.

அதேபோன்று சுமதி என்ற பெண் சட்டை மற்றும் காப்ரி அணிந்து வந்த போது, ஊழியர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும் உடைமாற்றி வந்தால் மட்டுமே தேர்வு எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அதிகாரிகள் கூட்டமாக வந்து அவரிடம் உடைமாற்றி வருமாறு வலியுறுத்தியுள்ளனர்.

பின்னர் அவசர அவசரமாக வீட்டிற்கு சென்று சல்வார் கமீஸ் உடையை அணிந்து வந்துள்ளார். இதுகுறித்து பிரபல வக்கீல்களிடம் கேட்டறிந்தபோது, " ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு எந்தவித உடை விதியும் இல்லை. 18 வயது நிரம்பி, புத்தி சுவாதீனம் இருப்பவராக இருந்தால் போதுமானது" என்று கூறியுள்ளனர். இந்த சம்பவமானது ஆர்டிஓ அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.