சபரிமலை கோவிலுக்கு சென்று அய்யப்பனை வழிபட்ட பெண்களால் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல முடியவில்லை.
சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்களால் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை! ஏன் தெரியுமா?

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 10 வயதுக்கு மேற்பட்ட
மற்றும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அய்யப்பன் பிரம்மசாரி
என்பதால் இளம் பெண்கள் அவரை தரிசிக்க கூடாது என்று பாரம்பரியாக கூறப்பட்டு
வருகிறது. இளம்பெண்கள் கோவிலுக்குள் வந்தால் அய்யப்பனின் பிரம்மச்சரியம்
பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அங்குள்ளவர்கள் கூறி வருகிறார்.
இதனால் பல ஆண்டுகளாக
அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி கிடையாது. ஆனால் கடந்த ஆண்டு
உச்சநீதிமன்றம் அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி
அளித்தது. இந்த உத்தரவை தொடர்ந்து பெண்கள் பலர் கோவிலுக்குள் செல்ல முயல்வதும்
அவர்களை அய்யப்ப பக்தர்கள் மற்றும் பா.ஜ.கவினர் தடுத்து நிறுத்தி திருப்பி
அனுப்புவதுமாக இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2ந் தேதி கேரளாவை சேர்ந்த பெண்கள்
இருவர் அதிகாலை நேரத்தில் கோவிலுக்கு சென்று அய்யப்பனை தரிசித்தனர்.
அய்யப்பன் கோவிலுக்கு
தாங்கள் சென்று வந்தததற்கான வீடியோ ஆதாரத்தையும் பெண்கள் இருவரும் வெளியிட்டனர்.
கோவிலுக்குள் சென்ற பெண்களில் ஒருவர் பெயர் கனகதுர்கா, 39 வயதான இவர் கேரள அரசு
ஊழியராக உள்ளார். மற்றொருவர் பெயர் பிந்து, 40 வயதான இவர் கன்னூர்
பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் தான்
கடந்த 2ந் தேதி சபரிமலை சென்று அய்யப்பனை தரிசித்தவர்கள்.
அதன் பிறகு இவர்கள்
இருவருக்கும் இந்து அமைப்புகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் மூலமாக கொலை மிரட்டல்
விடுக்கப்பட்டு வருகிறது. அய்யப்பன் கோவிலின் பாரம்பரியத்தை கெடுத்துவிட்டதாக
பிந்து, கனகதுர்கா குற்றஞ்சாட்டப்படுகின்றனர். அவர்களின் வீடுகள் மீதும் தாக்குதல்
நடத்தப்பட்டது. தினந்தோறும் கனகதுர்கா, பிந்து வீடுகள் முன்பு இந்து அமைப்பினர்
போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பிந்து மற்றும் கனகதுர்காவை கேரள போலீசார்
கடந்த 10 நாட்களாக பாதுகாத்து வருகின்றனர்.
இருவரின் இருப்பிடமும்
ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரகசிய இடத்தில் இருந்து பிந்து மற்றும்
கனகதுர்கா செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது தங்கள் இருவருக்குமே கொலை மிரட்டல்
வருவதாகவும், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறியுள்ளனர். சபரிமலை
கோவிலுக்குள் சென்ற தங்களால் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை உள்ளதாகவும்
அவர் தெரிவித்துள்ளனர். போலிசார் இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பார்கள்
என்று எதிர்பார்ப்பதாகவும் கனகதுர்கா, பிந்துஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.