6 பிள்ளைகள்..! கணவன் இல்லை..! சுடுகாட்டில் பிணங்களை எரித்துவிட்டு அங்கேயே தங்கியிருக்கும் பெண்மணி! பதற வைக்கும் சம்பவம்!

தனது ஆறு குழந்தைகளுடன் சுடுகாட்டில் பெண்மணி ஒருவர் வசித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரமிளா.இவருடைய சிறுவயதிலேயே இவருடைய பெற்றோர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆதரவில்லாமல் இருந்த பிரமிளாவை அவரது தந்தையின் தாயார் எடுத்து வளர்த்து வந்துள்ளார். வருமையின் காரணமாக பிரமிளா சிறுவயதிலிருந்தே பல்வேறு இடங்களில் வீட்டு வேலை செய்து நாட்களை ஓட்டி வந்தார்.

இந்நிலையில் பிரமிளா தங்கி வந்த கிராமத்திற்கு அருகே உள்ள கலத்தம்பட்டு என்ற கிராமத்தில் கூலி வேலை செய்து வந்த முருகன் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இவர்கள் முருகனது தாத்தா வீட்டிலேயே தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அந்த வீட்டிலேயே முருகனின் தாய் மாமா குடும்பமும் தங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கும் பிரமிளாவுக்கும் ஆறு குழந்தைகள் உள்ளன. முருகன் கூலி வேலை செய்து வந்ததால் அடிக்கடி வேலை விஷயமாக பெங்களூர் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

சமீபத்தில் பிரமிளாவுக்கும் முருகனது தாய் மாமாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததால் முருகனது தாய் மாமா பிரமிளாவை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறியுள்ளார். இதனால் செய்வதறியாது போன பிரமிளா தனது ஆறு குழந்தைகளுடன் முருகனது தாத்தா பாட்டியையும் அழைத்துக்கொண்டு அந்த கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கு அருகே உள்ள பகுதியில் தார்ப்பாய் கொண்டு தங்குவதற்கு இடத்தை தயார் செய்ய நினைத்தார். ஆனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், வேறு வழியில்லாமல் பிணங்களை எறித்துவிட்டு பணப் பட்டுவாடா செய்யும் இடத்தில் தார்ப்பாயால் சுற்றி கட்டி அங்கேயே வசித்து வந்தார். பிணங்கள் வரும்போது தனது தார்ப்பாய் மற்றும் பாத்திரங்களை எடுத்து ஓரம் வைத்து அவர்கள் போன பின்னர் தார்ப்பாய் கட்டி அங்கேயே வேறு வழியில்லாமல் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

 

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் பெங்களூர் சென்ற தனது கணவன் சொந்த ஊருக்கு வர முடியாமல் அங்கேயே சிக்கி தவித்து வருவதாக போன் மூலம் தொடர்பு கொண்டு பிரமிளாவுக்கு முருகன் கூறியுள்ளார். இந்த தகவலை அறிந்த தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறையினர் பிரமிளா மற்றும் அவரது குடும்பத்திற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கியுள்ளனர். மேலும் தற்போதைக்கு ஊருக்கு உள்ளே ஒரு வீட்டில் தங்க வைத்து அதற்கு வாடகையை தருவதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.