திருச்சி பஸ் ஸ்டாண்டை கலக்கும் லட்டு ராணி..! பக்கத்தில் வருவார்..! மயக்குவார்...! பிறகு?

பேருந்து நிலையத்திற்கு பயணிகளிடம் மயக்க லட்டு கொடுத்து பெண்ணொருவர் நகைகளை திருடிய சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறுக்கு அருகிலுள்ள ரெங்கநாதபுரம் கீழத்தெரு எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு  பார்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பல்லடத்தில் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

இதனால் இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் பல்லடத்தில் வசித்து வருகிறார். மாதத்திற்கு ஒருமுறை ரெங்கநாதபுரத்திற்கு சென்று வருவதை அவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். இதேபோன்று ஜூன் மாதம் 27-ஆம் தேதியன்று பார்வதி பல்லடத்திற்கு செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பேருந்தில் ஏறி டிக்கெட் எடுத்த பின்னர், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பார்வதிக்கு அருகே வந்து அமர்ந்துள்ளார். 

அந்த மர்மபெண் பார்வதியிடம் நைசாக பேச்சு கொடுக்க, இருவரும் தகவல்களை பரிமாறி கொண்டனர். அப்போது அந்த பெண் தான் கோவிலுக்கு சென்று வருவதாக கூறி ஒரு லட்டை பார்வதியிடம் கொடுத்துள்ளார் பார்வதியும் அந்த பெண் மீது நம்பிக்கை வைத்த காரணத்தினால் அந்த லட்டை சாப்பிட்டுள்ளார்.

சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே பார்வதி மயக்கமுற்றார். இதனை பயன்படுத்தி கொண்ட அந்த பெண், பார்வதியின் உடலிலிருந்த 8.5 பவுன் நகைகளை திருடியுள்ளார். பின்னர் நைசாக நடுவழியிலேயே அந்த பெண் இறங்கி சென்றுள்ளார்.

பல்லடம் வந்த பின்னரும் பார்வதி எழுந்து செல்லாததை கண்ட நடத்துநர், அவரை எழுப்ப முயன்றார். அப்போதுதான் நடத்துனருக்கு அவர் மயக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக பார்வதியின் செல்லில் கடைசியாக கிடைத்த நம்பருக்கு கால் செய்து அவருடைய மகனிடம் நிகழ்ந்தவற்றை கூறியுள்ளார்.

பார்வதியின் மகன் விரைந்து வந்து பார்வதியை மருத்துவமனையில் அனுமதித்தார். 3 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் பார்வதி நினைவு திரும்பினார். பார்வதிக்கு சரிவர ஞாபகமில்லாத காரணத்தினால் காவல்துறையினரால் சரியாக நடவடிக்கை எடுக்க இயலவில்லை. 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பார்வதி மீண்டும் பழைய இடத்திற்கு செல்வதற்கு அதே பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது இந்த மர்ம பெண்னை, பார்வதி பார்த்து தன்னுடைய மகன் மற்றும் கணவரிடம் அடையாளம் காட்டியுள்ளார்.

உடனடியாக 3 பேரும் பார்வதியை சுற்றி வளைத்து பிடித்தனர். அதன் பின்னர் கண்டோன்மெண்ட் காவல்துறையினரிடம் அந்தப்பெண்ணை ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மர்மப்பெண் கடந்த 25 வருடங்களாக இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், அவருடைய பெயர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராணி என்பதும் தெரியவந்துள்ளது. 

காவல்துறையினர் தொடர்ந்து ராணியிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த சம்பவமானது திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.