காட்டுக்குள் நண்பர்களுடன் உற்சாக டிரக்கிங்! குறுக்கே வந்த ஒற்றை காட்டு யானை! தப்பி ஓடிய கணவன்! சிக்கிய மனைவியின் உடல் சிதைந்த பயங்கரம்!

அனுமதியின்றி மலையேறிய தனியார் பெண் மருத்துவ அதிகாரியை காட்டு யானை கொலை செய்திருக்கும் சம்பவமானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் எனுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே மிகவும் அடர்த்தியான பரப்பை கொண்டது பாலமலை காட்டுப்பகுதி. இதன் அடிவாரம் குஞ்சூர்பதி கிராமத்தில் அமைந்துள்ளது.  இந்த கிராமத்திலிருந்து மாங்குழி எனும் இடத்தின் வாயிலாக மலையேறுவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இதற்கு அரசாங்கம் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை. மலையேறுவது சிலர் அத்துமீறி செய்து வருவதாக கூறப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் புவனேஸ்வரி தன்னுடைய கணவர் மற்றும் நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலையில் பாலமலை ஏறியுள்ளார். அப்போது இவர்களுடைய வழியை ஒற்றை ஆண் காட்டு யானை மறித்துள்ளது. பதறிப்போய் அனைவரும் சிதறடித்து ஓடினர். 

ஆனால் காட்டு யானை வேகமாக புவனேஸ்வரியை துரத்தி சென்றது.  ஒருகட்டத்தில் புவனேஸ்வரியை அடைந்த காட்டுயானை அவரை வேகமாக தாக்கி கொலை செய்தது. புவனேஸ்வரியின் கணவரான பிரசாந்த் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் புவனேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் விசாரணை நடத்தியதில் புவனேஸ்வரி தன்னுடைய கணவர் மற்றும் நண்பர்களுடன் பாலமலை ஏறுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மலை ஏறுவதை தடுப்பதற்கு வனத்துறையினர் எந்த முயற்சியும் எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தால் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

இந்த சம்பவமானது பாலமலை பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.