எல்லாத்தையும் முடிச்சிட்டு இங்க தான் அவள புதைச்சோம்..! 7 வருடத்திற்கு பிறகு கிடைத்த புஷ்பா எலும்புக் கூடுகள்! நெல்லை பரபரப்பு!

7 ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை மாவட்டத்தில் டவுன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய நண்பர் ராமையன்பட்டி என்னும் இடத்தை சேர்ந்த ஆசீர்செல்வம். இவ்விருவரையும் நெல்லை காவல் துறையினர் கடந்த 5-ஆம் தேதியன்று கொலை மிரட்டல் குற்றத்திற்காக கைது செய்தனர். காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது வேறு சில திடுக்கிடும் உண்மைகளும் வெளியாகியுள்ளன.

இவ்விருவருக்கும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவருடன் நட்பு இருந்துள்ளது. சிவகுமார் நெல்லை மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த புஷ்பா பீடி மற்றும் சுருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தார். முதல் கணவனை பிரிந்த இவருக்கு சிவகுமாருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டு முதல் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். 

இதனிடையே புஷ்பா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிவகுமாரிடம் வற்புறுத்தி வந்துள்ளார். திடீரென்று ஒரு நாள் புஷ்பாவின் தொல்லை தாங்காத சிவகுமார் நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சிவகுமார், மணிகண்டன், ஆசீர்செல்வம் ஆகியோர் இணைந்து புஷ்பாவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்க நிலையில் இருந்த புஷ்பாவை அவர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் அவருடைய உடலை தச்சநல்லூரில் உள்ள வாசுடையார் சாஸ்தா கோவில் அருகே குழிதோண்டி புதைத்துள்ளனர். சம்பவத்திற்குப் பின்னர் சிவகுமார் மும்பை மாநகரத்திற்கு சென்று வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். 

இதனிடையே, மணிகண்டன் மற்றும் ஆசீர் செல்வம் ஆகியோர் கொடுத்த தகவல்களின்படி சிவக்குமாரை நெல்லைக்கு காவல்துறையினர் வரவழைத்தனர். பின்னர் காவல்துறையினர் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தியதில், புஷ்பாவை புதைத்த இடத்தை அவர் காட்டியுள்ளார். காவல்துறையினர் அங்கிருந்து புஷ்பாவின் எலும்புகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.