பெற்ற மகனை அடித்து, உதைத்து துன்புறுத்தும் கொடூர தாய்! கணவனிடம் பணம் பறிக்க வெறிச் செயல்!

முன்னாள் கணவனிடம் பணம் கறக்க குழந்தையை துன்புறுத்தி வீடியோ எடுத்த கொடூர பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.


மும்பையில் முன்னாள் கணவனிடம் இருந்து பணம் கறக்க தங்களின் மூன்றரை வயதுக் குழந்தையை  சரமாரியாக அடித்துத் துன்புறுத்திய பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த ஃபயஸ் ஷேக் என்பவர் தனது முன்னாள் மனைவி ஹீனா ஷேக் மீது காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தான் கொடுக்க வேண்டிய மாதப் பராமரிப்புத் தொகையைக் கொடுக்க தாமதம் செய்தால் தங்கள் மகனை ஹீனா தாக்கிக் கொடுமைப்படுத்தத் தொடங்கி விடுவதாகவும், அண்மையில் தன்னிடம் கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவதற்காக மகனை தான் தாக்குவதை வீடியோவாக எடுத்து தனக்கு அனுப்பி வைத்தாகவும் தெரிவித்துள்ளார். 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஃபயசும், ஹீனாவும் திருமணம் செய்துகொண்ட நிலையில் ஹீனாவுக்கும், ஃபயசுக்கும் தொடர்ந்து ஏற்பட்ட மன வேறுபாடுகளால் பிரிந்தனர். தங்கள் விவாகரத்தின் போது தங்கள் மதத் தலைவரிடம் குழந்தை மனைவியிடம் வளரவும், மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடூவதாகவும் ஃபயஸ் ஒப்புக்கொண்டார். 

மாதந்தோறும் பராமரிப்புத் தொகையைக் ஒழுங்காக கொடுத்து வரும் நிலையில் சில மாதங்கள் தவிர்க்க இயலாத காரணங்களால் தாமதமானால் ஹீனா குழந்தையைத் துன்புறுத்துவதாகவும் இந்த முறை கூடுதல் பணம் கேட்டு குழந்தையைத் துன்புறுத்தி வீடியோவே எடுத்து அனுப்பியிருப்பதாகவும், ஃபயஸ் கூறுகிறார். தனது குழந்தையை மீட்டு தன்னிடம் ஒப்படைக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

இது தொடர்பாக ஹீனாவின் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஹீனா குழந்தையை கொடுமைப்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.