நான் ஆத்தா வந்துருக்கேன்..! ஹவுஸ் ஓனரிடம் சித்து விளையாட்டை காட்டிய கெத்து பெண்மணி!

வாடகைக்கு குடியிருந்த பெண் தனக்கு தெய்வசக்தி உள்ளதாகவும், அருள்வாக்கு சொல்வதாகவும் கூறி வீட்டின் உரிமையாளரிடம் 18 சவரன் நகையை திருடிய சம்பவமானது செங்குன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செங்குன்றம் பகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பாலாஜி கார்டன் என்னும் பகுதியில் மஞ்சுநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவியின் பெயர் ராஜாத்தி. இருவரும் தங்களுடைய சொந்த பிளாட்டில் வசித்து வருகின்றனர். கீழே உள்ள வீட்டை லாரி உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த ராசு என்பவருக்கு வாடகைக்கு விட்டனர். இவர் மனைவியின் பெயர் சங்கமித்ரா. சங்கமித்ராவிற்கும் ராஜாத்திக்கும் சில நாட்களிலேயே நல்ல உறவு ஏற்பட்டது. இருவரும் மிகவும் நெருங்கி பழகி வந்தனர்.

இந்நிலையில், சங்கமித்ரா தனக்கு விசேஷ தெய்வ சக்திகள் உள்ளதாகவும் தான் குறி சொன்னால், அது அப்படியே நடக்கும் என்றும் ராஜாத்தியை நம்ப வைத்துள்ளார். மேலும் ராஜாத்தி இடமுள்ள நகைகளுக்கு விசேஷ பூஜை செய்து தருவதாகவும் சங்கமித்ரா கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜாத்தி, தன்னிடமிருந்த 18 சவரன் நகைகளை சங்கமித்ராவிடம் பூஜைக்கு வழங்கியுள்ளார். 

பல நாட்களாகியும் சங்கமித்ரா நகைகளை திருப்பித்தரவில்லை. மேலும் தான் வீட்டை காலி செய்ய போவதாக ராஜாத்தியிடம் கூறியுள்ளார். இதனால் சந்தேகித்த ராஜாத்தி செங்குன்றம் காவல் நிலையத்தில் சங்கமித்ராவை பற்றி புகார் அளித்தார். செங்குன்றம் காவல் துறையினர் சங்கமித்ரா அவரை கைது செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், நகைகளை அடகு கடையில் வைத்துவிட்டதாக சங்கமித்ரா கூறியுள்ளார்.

செங்குன்றம் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட அடகு கடைக்கு சென்று நகைகளை மீட்டு ராஜாத்தியிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவமானது செங்குன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.