அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை வாபஸ்.... எடப்பாடியாரின் அதிரடி உத்தரவுக்கு அரசு ஊழியர்கள் பாராட்டு மழை.

அரசு அதிகாரிகளும், அரசாங்கமும் சீராக இயங்குவதுதான் நல்ல அரசுக்கு அழகு. எனவே, அரசு ஊழியர்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை. அந்த வகையில் எடப்பாடியார் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.


கொரோனா பாதிப்பை எதிர்கொண்ட தனியார் நிறுவனங்கள், அதிரடியாக ஆட்குறைப்பு மற்றும் சம்பள குறைப்புகளைச் செய்தன. தனியார் நிறுவனங்கள்தான் இதைச் செய்தன என்றால் கேரளா உள்ளிட்ட வேறு பல மாநில அரசுகளும், ஊழியர்களுக்கான சம்பளத்தில் பிடித்தம் செய்தன.

தமிழகத்திலும் இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குரல்கள் எழுந்தன. ஆனால், முதல்வர் எடப்பாடி அதை கண்டுகொள்ளவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியத்தில் எவ்வித பிடித்தமும் செய்யவில்லை. அதுமட்டுமல்லாது அடுத்து வந்த தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்கு போனசும் கொடுத்தும் அசத்தினார். எடப்பாடியின் இந்த வாஞ்சையான அணுகுமுறையால் அரசு ஊழியர்கள் உண்மையிலேயே நெகிழ்ந்துதான் போனார்கள்.

இந்த நிலையில், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி புதிய ஊதியத்திற்குரிய 21 மாதகால நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்கள், 22.1.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மக்கள் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் முதல்வரின் கோரிக்கையை ஏற்று பணிக்குத் திரும்பினர். இருந்தபோதிலும், அரசால் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளையும், வழக்குகளையும் திரும்ப பெற, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தன.

இந்த நிலையில், அவர்களின் வேண்டுகோளை ஏற்று ’மறப்போம்; மன்னிப்போம்’ என்ற அடிப்படையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு கைவிடுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். எடப்பாடியின் இந்த அறிவிப்பு அவர்களை ஆனந்த கூத்தாட வைத்துள்ளது.

தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றமும், எடப்பாடி மீதான அவர்களது நன்றி உணர்வும் அதிமுகவுக்கு சாதகமாக மாறி உள்ளது என்றே சொல்ல வேண்டும்!