தடையான லாட்டரி சீட்டுக்கு உண்மையான தடை வருமா?

விழுப்புரத்தைச் சேர்ந்த நகை செய்யும் தொழிலாளர் அருள் அவருடைய மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


அதனை வாட்ஸ்அப்பில் வீடியோவாக பதிவு செய்தும் வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் யாருக்கும் மனதை உலுக்குவதாக உள்ளது என்றும் லாட்டரி சீட்டுக்கு உறுதியான நடவடிக்கை வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் அப்துல் சமது கேட்டுக்கொண்டுள்ளார். 

நகை தொழில் செய்யும் அருள் ஆரம்பத்தில் பட்டரை வைத்து தொழில் செய்து வந்துள்ளார். தொழில் நலிவடைந்து கடனானதால் வேறு பட்டறைக்கு கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார். கடன் அதிகரிக்க லாட்டரி சீட்டு வாங்க ஆரம்பித்துள்ளார்.

சம்பாதித்த பணத்தை லாட்டரியில் இழந்து பணநெருக்கடியாகி கடன் அதிகரித்து வாழமுடியாத நிலையில் நகை தொழில் செய்ய பயன்படுத்தும் சயனைட் விஷத்தை தனது மூன்று பச்சிளம் பெண் குழந்தைகள் பிரியதர்சினி (வயது 5) யுவஸ்ரீ (வயது 3) பாரதி (வயது 1) மற்றும் தன் மனைவிக்கும் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட ஒரு சோகமான நிகழ்வு விழுப்புரத்தில் நடந்திருக்கிறது.

மரண தருவாயில் “தன் மரணத்திற்கு தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டே காரணம் விழுப்புரத்தில் லாட்டரி சீட்டை ஒழித்து விடுங்கள் 3 நம்பர் லாட்டரியை ஒழித்து விடுங்கள் என்னை போன்று 10 பேர் பிழைப்பான்” என்று வாட்ஸ்அப் வீடியோவில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன் பிறகாவது தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை உறுதியான எடுக்க வேண்டும். விழுப்புரம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை உள்ளூர் காவல்துறையினர் உதவியுடன் கொடிகட்டி பறக்கிறது. அப்படிப்பட்ட சில காவல்துறையினர் விழுப்புரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கத்து.

எனவே இனியாவது தடை செய்யப்பட்ட லாட்டரியின் மூலம் உயிர்கள் மேலும் பலியாவதைத் தடுத்து நிறுத்திட லாட்டரி சீட்டு விற்பனையாளர்களை தமிழக அரசும் காவல்துறையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மீறி விற்கக் கூடியவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.