11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு நாளையுடன் முடிவுக்கு வருகிறதா? துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகர் விசாரணை..!

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி, தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால், நாளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை நடத்துவார் என்பது தெரியவந்துள்ளது.


11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் தனபாலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜூன் 1ஆம் தேதி கடிதம் எழுதினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவளிக்க வேண்டுமென 11 பேருக்கும் கொறடா எந்த உத்தரவையும் அனுப்பவில்லை என்று தெரிவித்திருந்தார். 

அதனால் அன்றைய சூழலில் 11 பேரும் அரசுக்கு எதிராக வாக்களித்த நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை, அது மன்னிக்கப்பட்டது என்றும் கூறினார். முதல்வர் எழுதிய கடிதத்தில் அடிப்படையில் தான் நாளை எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் பதிலளிப்பார்கள் என்று தெரியவந்துள்ளது.

இப்போது அனைவரும் அதிமுகவில் தான் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இதனையும் தெரிவிக்கும் பட்சத்தில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவசியம் இல்லை என்று சபாநாயகர் இறுதி முடிவு எடுத்து உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தனை நாட்களும் பரபரப்பாக இழுத்துவந்த 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு நாளையுடன் ஒரு முடிவுக்கு வருகிறது. சபாநாயகர் தீர்ப்பின் அடிப்படையிலே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் இருக்கும் என்பதால் யாருக்கும் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை.