இரும்புச்சத்து மாத்திரையால் குழந்தை தலை பெருக்குமா - சிசு மரணத்திற்கும் நைட் ஷிப்ட்டிற்கும் என்ன சம்பந்தம் - சிசுவின் வளர்ச்சிக்கு சைவம் போதுமா?

பொதுவாக சில கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் இரும்புச்சத்த மாத்திரை பரிந்துரைப்பதுண்டு. இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், குழந்தை பெரிய தலையுடன் பிறக்கும் என்று அச்சப்பட்டு மாத்திரையை சிலர் தவிர்க்கிறார்கள்.


·         பொதுவாக ஆரோக்கியமான பெண்ணுக்குக்கூட கர்ப்ப காலத்தில் ரத்த சோகை ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

·         ரத்த சோகை ஏற்பட்டால் பிரசவத்தின்போது தாய்க்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். இதயம் பாதிக்கப்பட்டு உதிரப்போக்கு அதிகமாகலாம்.

·         அதனால் ரத்த சோகை இருந்தாலும், ரத்த சோகை ஏற்படுவதற்கான அறிகுறி இருந்தாலும் இரும்புச்சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

·         இரும்புச்சத்து மாத்திரை எடுத்துக்கொண்டால் குழந்தையின் தலை பெரிதாகிவிடும் என்று அச்சப்படுவதும் சுகப்பிரசவம் நடக்காது என்று நினைப்பதும் மூட நம்பிக்கை மட்டுமே.

அதனால் கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை வராமலிருக்க பேரீச்சம்பழம், தேன், வேர்க்கடலை, முருங்கைக்கீரை போன்றவற்றையும் நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 சிசு மரணத்திற்கும் நைட் ஷிப்ட்டிற்கும் என்ன சம்பந்தம்?

கர்ப்பகாலத்தில் தொடர்ந்து நைட் ஷிப்ட்டில் பணிபுரியும் பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் இறப்புவிகிதம் அதிகமாக இருப்பதாக மருத்துவ உலகில் ஒரு கருத்து உண்டு. இது உண்மையா என்பதை பார்க்கலாம்.

·         நல்ல சீரான தூக்கத்திற்கும் ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது உண்மைதான்.

·         பொதுவாகவே கர்ப்பம் தரித்ததும் வாந்தி, அஜீரணம், சோர்வு போன்ற பிரச்னைகளுடன் தூக்கமின்மையும் சேர்ந்துவிடும்.

·         ஒவ்வொரு மனிதருக்கும் உடல் கடிகாரம் வழிகாட்டுதல்படி தூக்கமும் விழிப்பும் இருக்க வேண்டும். அப்போதுதான் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கமுடியும்.

·         தூக்கம் குறையும்போது பெண்ணுக்கு எரிச்சல், கோபம், ஆற்றாமை உண்டாவதற்கு வாய்ப்பு உண்டு.

இரவு ஷிப்ட்டில் தொடர்ந்து பணிபுரியும் பெண்களுக்கு போதுமான அளவு தூங்கமுடியாமல் போவதால், உயர் ரத்த அழுத்தம், இதய குறைபாடு, சுவாச குளறுபடி ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதனால் முடிந்தவரை கர்ப்பிணிகள் இரவு ஷிப்ட் வேலையை தொடர்ந்து செய்யக்கூடாது.

   சிசுவின் வளர்ச்சிக்கு சைவம் போதுமா?

அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் தங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நிறைய ஊட்டச்சத்து கிடைக்கவேண்டும் என்ற ஆசை உண்டு. சைவ உணவு மட்டுமே எடுத்துக்கொள்வதால் சிசுவுக்குப் போதுமான சத்துக்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு.

·         மீன், கோழி, முட்டையில் அதிக அளவு புரோட்டீன் இருக்கிறது என்றாலும், புரோட்டீன் சத்தினை பயிறுகள் மூலம் கர்ப்பிணி பெற்றுக்கொள்ள முடியும்.

·         தானியங்களில் கர்ப்பிணிக்குத் தேவையான புரதங்கள், கார்போ ஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கின்றன.

·         இரும்புச்சத்து மாமிச உணவில் நிரம்பியிருப்பது உண்மை என்றாலும், அதே அளவு சத்துக்களை உலர்ந்த பழங்கள் மற்றும் கீரைகளில் இருந்தும் பெற்றுவிட இயலும்.

·         காய்கறிகளில் ஃபோலிக் அமில சத்துக்கள் நிரம்பியிருப்பதால், குழந்தை பிறப்பில் வரும் சிக்கல்களை சைவ உணவுகொண்டே தடுத்துவிட இயலும்.

பால் மற்றும் பருப்புகளில் எலும்பு வளர்ச்சிக்கான கால்சியம் கிடைக்கிறது. அஜீரணம், கூடுதல் கொழுப்பு போன்ற பிரச்னைகள் அசைவத்தில் இருப்பதால் கர்ப்பிணிகள் சைவ உணவு சாப்பிடுவது மட்டுமே குழந்தையின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு போதுமானது.