அண்ணா பல்கலையைக் காப்பாற்றுமா தமிழக அரசு..? அமைச்சர் அன்பழகனுக்கு மெகா ஆதரவு

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுசெல்ல பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன


இதுகுறித்து ஆராய தனி கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது. அந்த கமிட்டியின் ஆலோசனை படி, அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், தொடர்ந்து பல்வேறு வகையில் தமிழக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆகவே, மத்திய அரசின் வலையில் தமிழகம் சிக்கிவிடக் கூடாது என்று கேட்டுகொண்டுள்ளார் வீரமணி.

அண்ணா பல்கலைக் கழகம் - தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா பெயரில் நிறுவப்பட்ட திராவிடர் இயக்கச் சாதனைகளின் பெருமைமிகு சான்று ஆகும். இதனை கபளீகரம் செய்து மத்திய அரசு தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர முயற்சி செய்துவருகிறது. இதனை ஆராய ஐவர் குழு நியமனம் செய்யப்பட்டது.

அப்போதே, ‘‘இத்திட்டத்தை தமிழ்நாட்டு அ.தி.மு.க. அரசு ஏற்கக்கூடாது; இதனால் காலங்காலமாக நமக்கு - வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத 69 சதவிகித இட ஒதுக்கீடு பறிக்கக் கூடிய அபாயமும், ‘‘ஒட்டகம் கூடாரத்திற்குள் தலையை விட்டு நுழைந்து, முழு ஒட்டகமும் உள்ளே வந்து, உள்ளே இருப்பவர்களை வெளியே விரட்டிடும்‘’ கதைபோல, அண்ணா பல்கலைக் கழகத்தின் நிலைமையும் ஆகிவிடும்!’’ என்று அதில் குறிப்பிட்டிருந்தோம்.

இதையடுத்து உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், ‘‘இந்தத் திட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை’’ என்று கூறியிருக்கிறார். இதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இறுதிவரை இருக்கவேண்டும்; இருக்கும் என நம்புகிறோம்.

சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் தேடல் குழு கன்வீனராக டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத் (ஜே.என்.யூ.) துணைவேந்தர் என்ற பிரச்சினைக்குரிய நபரை ஆளுநர் நியமித்திருப்பது தவறான முன்மாதிரியாகும். வெளிமாநிலத்தவர், ஏன் தமிழ் தெரியாத ‘சூரப்பர்கள்’ அங்கு வந்து அதையும் ஆக்கிரமிக்கும் அபாயம் உள்ளது. எனவே, உரிமைக்குப் போராடத் தயார் நிலையில் இருப்போம் நாம் அனைவரும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் வீரமணி.