பாத்திரம் நிறைய தண்ணீர்! முழுக்க மஞ்சள் பொடி! முக்கி எடுத்த வெள்ளைத் தாள் பணமாக மாறிய அதிசயம்! ஆனால்..!

பணத்தை இரட்டித்து தருவதாக கூறி ஏமாற்றிய நபர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடியில் சிலுவை பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல் அந்தோனி. சிவகாசியில் வசித்து வந்த பால்பாண்டி என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் மைக்கேல் அந்தோனியை தொடர்பு கொண்டுள்ளார். 

அப்போது பணத்தை ரசாயனத்தின் உதவியுடன் இரட்டித்து தருவதாக கூறியுள்ளார். பால்பாண்டியின் பேச்சுகளை அந்தோணி தொடக்கத்தில் நம்பவில்லை. இருப்பினும் பால்பாண்டியின் மயக்க வைக்கும் பேச்சில் அந்தோணி மயங்கினார். சிலுவை பட்டிக்கு வருமாறு அந்தோணி பால்பாண்டிக்கு அழைப்பு விடுத்தார்.

கூறியவாறே பால்பாண்டி சிலுவைபட்டிக்கு வந்துள்ளார். அப்போது அந்தோனியும் அவருடைய மகனுமான செங்குமாரும் பால்பாண்டி மோட்டார் கொட்டகைக்கு அழைத்து சென்றனர். சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை இரட்டித்து தருமாறு பால்பாண்டி இடம் கொடுத்துள்ளனர்.

பணத்தை பெற்றுக் கொண்ட பால்பாண்டி ஒரு பாத்திரத்தில் ஒவ்வொரு நல்ல நோட்டின் கீழும் வெள்ளைத்தாளை வைத்துள்ளார். ஏதோ ஒரு ரசாயனத்தை அதன் மீது ஊற்றியுள்ளார்‌. 3 மணி நேரம் காத்திருக்குமாறு பால்பாண்டி அவர்களிடம் கூறியுள்ளார். அவ்வப்போது தந்தையையும் மகனையும் திசைதிருப்பி நல்ல நோட்டுகளை திருடிக்கொண்டு இருந்துள்ளார்.

இவர்கள் செய்யும் பித்தலாட்டத்தை காவல் துறையினர் கண்டுபிடித்துவிட்டனர். உடனடியாக அந்தோணியின் கொட்டகைக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.

3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது சிலுவைபட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.