பிரதமர் மோடி இடறி விழுந்ததை கிண்டல் செய்யலாமா?

கம்பீரமாக நடந்து செல்வதை விரும்புபவர் நம் பிரதமர் நரேந்திர மோடி. படிக்கட்டுகளில் கைப்பிடியைப் பயன்படுத்தாமல், அதேநேரம் நிதானமாக இல்லாமல் வேகவேகமாக ஏறி, இறங்குவார் மோடி.


ஆனால், முதன்முறையாக தொலைக்காட்சியின் பார்வையில் பட்டு கீழே விழுந்து எழுந்தரித்துள்ளார். மோடியின் நடை குறித்து தொல்காப்பியன் எழுதியிருக்கும் பதிவு இது. மோடியின் நடை எப்படிப்பட்டது, இனி எப்படி மாற்றம் அடையும் என்பதை எழுதியிருக்கிறார். 

ஒரு சண்டைக்காரனின் நடை மோடியின் உடையது; ஒரு கருத்து முரணாளியின் நடை அது. எதிரி மன நிலையை உடைய ஒருவரைப் போன்றது; வீம்புக்காரனின் உடல் மொழியில் அமையும் நடை; தனது நடையின் மூலம் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு ஒரு செய்தியை உணர்த்தும் நோக்கம் உடைய ஒருவரின் நடை அது;

எந்த ஒரு அசைவயும் தனக்காக அல்லாமல் மற்றவர்களுக்காக எடுத்து வைக்கும் ஒரு வியாபார குணம் உடையவரின் நடை மோடியின் உடையது. ஒரு சண்டியரைப் போல தனது உடல் மொழியை அமைத்துக் கொள்கிறார் மோடி. இரண்டு முழங்கைகளும் வெளிப்புறமாக விரிந்து இருக்க அவர் நடப்பது, சண்டை களத்துக்குள் புகும் ஒரு சண்டியரைப் போலத்தான் இருக்கிறது.

அவரது மனதுக்குள் எப்போதும் சண்டை நடந்துகொண்டு இருப்பதை அவரது நடைமொழி அறிவிக்கிறது. மோடி தனது எதிரிகளோடு எப்போதுமே மனச் சண்டை புரிகிறார். அவர்களது கேள்விக்கு அதிரடி பதில்களை கொடுக்கிறார். சுண்டு விரலில் அவர்களை அடித்து வீழ்த்துகிறார். கேள்விக்கு கேள்வி, பதிலுக்கு பதில் என சொடுக்கு போட்டு தனது எதிரிகளை சுழட்டி அடிக்கிறார். ஒவ்வொரு நொடியிலும் மோடி தனது எதிரிகளை வென்று முன்னேறுகிறார். மனதுக்குள் அவர் அடையும் வெற்றியின் வீச்சாகத்தான் அவரது நடை வெளிப்படுகிறது.

ஒரு வெற்றி வீரனின் நடை அது. சரியாகச் சொன்னால் யுத்த களத்தில் எதிரியை தரையைக் கவ்வ வைத்த ஒரு வெற்றி வீரனின் நடை எப்படி இருக்குமோ அப்படியான நடைதான் மோடியின் நடை. அதாவது ஒரு வன்முறையாளரின் நடை அது!

மோடியின் மனதில் கருத்துப் போர் நடப்பது இல்லை. நலத்திட்டங்கள் குறித்தோ சமூக மேம்பாடு குறித்தோ அவருடைய மனதில் எந்த அலசலுக்கும் இடம் இல்லை. மோடி, எதிர்கால இந்திய சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனைப் போக்குக்கு எல்லாம் தனது மனதில் இடம் கொடுப்பது இல்லை. அவருடைய மனதில் சமூக சமத்துவம், பொருளாதார மேம்பாடு, உலக அரங்கில் இந்திய சமூகத்தை உயர்த்திச் செல்வது எப்படி போன்ற எண்ணங்கள் முளைப்பதே இல்லை.

மோடியின் மனதில் எப்போதும் போராட்டம் குறித்த சிந்தனைகள் மட்டுமே முளை விடுகின்றன. இந்திய சமூகத்தை இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறார் மோடி. அதன் ஒரு பக்கத்தில் நின்று கொண்டு எதிர் பக்கத்தை உதைத்து தள்ளிக் கொண்டே போகிறார். மோடிக்குள் நடக்கும் இந்தச் சண்டையில்தான் அவரது அரசியல் வாழ்வே இருக்கிறது என்று அவர் நம்புகிறார். பொதுச் சமூகத்தைப் பற்றிய எந்த ஒரு பிரக்ஞையும் அவருக்குள் இல்லை.

மோடியின் நடை அவரது மன நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கைப்பிடிகளைப் பிடிக்காமல் படிக் கட்டுகளில் ஏறுவது, மூன்றாக இருந்தாலும் முப்பதாக இருந்தாலும் படிக் கட்டுகளில் விரைந்து ஏறிச் செல்வது அவரது குணத்தின் ஒரு வெளிப்பாடுதான். படிக் கட்டுக்களில் ஏறக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் மோடி, தனக்குக் கிடைத்த விளம்பர வாய்ப்பாக நினைத்து அதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்.

ஒரு சிறுவனைப் போல அதில் அவர் காட்டும் முனைப்பு அவரது விளம்பர மன நிலையின் உச்சம். எப்போதும் தன்னைப் பற்றியே சிந்திக்கும், எப்போதும் மனதுக்குள் தனது எதிரிகளுக்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்கும் ஒருவருடைய விசித்திரமான மன நிலைக்கு மோடியின் நடை ஒரு சிறந்த உதாரணம்.

கங்கைக் கரையில் இன்று தடுக்கி விழுந்து இருப்பது நம்மைப் பொருத்தவரை ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால், மோடியைப் பொருத்தவரை அது அவருக்கு பெரிய அவமானம்; ஆகப் பெரிய சறுக்கல்; நிகழ்ந்து கொண்டு இருக்கும் வாழ்வின் பெரிய திருப்பத்தின் சகுனம்; அதாவது, அவரது வீழ்ச்சியை அவருக்கு அறிவிக்கும் அசரீரி!

உண்மையில், பிரதமர் நரேந்திர சிங் மோடியின் மனதுக்குள் மீண்டும் ஒரு தீவிர சண்டையை மூட்டி விட்டு இருக்கிறது இந்த இடறல். இனி முன்னிலும் வேகமாக மனச் சண்டையில் இறங்குவார் மோடி. முன்னிலும் வேகமாக அவரது நடை அவரை ஒரு வன்முறையாளராக சித்தரிக்கப் போகிறது. பாவம் இந்தியர்கள்!