கபசுரகுடிநீருக்கு அனுமதி கொடுப்பாரா பிரதமர் மோடி..? வீடியோ கான்ஃபரன்ஸ் குறித்து விவரிக்கிறார் மருத்துவர் கு.சிவராமன்.

கொரோனா அறிவிப்பு வந்த நேரத்தில் இருந்தே, மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கவேண்டும் என்று சித்தவைத்தியர்கள் கூறி வருகிறார்கள்.


ஆனால், அவர்களை அடக்கியொடுக்குவதில்தான் அரசு ஈடுபட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடியிடம் கபசுரகுடிநீர் குறித்து எடுத்துரைக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார் மருத்துவர் கு.சிவராமன்.

இன்று காலை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் மூலம், வீடியோ கான்பிரன்சில் பிரதமரிடம் நேரடியாக விவாதிக்க அழைப்பு வந்தது. நேற்று இரவு பிரதமர் அலுவலக அதிகாரி அவசர அழைப்பாக தகவல் அனுப்ப, காலை 11.30 மணிக்கு மத்திய ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கு வரச்சொல்லி பணித்திருந்தார்கள்.

நாடு முழுவதில் இருந்தும், 12 மூத்த ஆயுஷ் துறை பேராசிரியர்களை நபர் " ஒருவர் 3-4 நிமிடங்கள் தங்கள் துறை மூலம் என்ன செய்யலாம்,"என பிரதமர் அலுவலகம் பேசச் சொல்லியிருந்தனர். மத்திய சித்த மருத்துவ கவுன்சிலின் டைரக்டர் ஜெனரல் மருத்துவர். கனகவல்லி அவர்கள், மாநில மருந்து உரிமை வழங்கும் அதிகாரியும் பேராசிரியருமான மரு. பிச்சையா குமாருடன், முக்கிய சித்த மருத்துவ பயிற்சியாளர் எனும் அடிப்படையில் எனக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எங்களது கலந்துரையாடலுக்குப் பின்னர், சித்த மருத்துவ மூத்த பேராசிரியரும் தேசிய சித்த மருத்துவ மருந்தியல் குழுவின் தலைவருமான புது. செயப்பிரகாச நாராயணன் அவர்கள், சித்த மருத்துவர்கள் சார்பாக பிரதமரிடம் நேரடியாக உரையாற்றினார். 

இப்போது உருவாகியுள்ள இக்கட்டான சூழலில் "கபசுரக் குடிநீரை" கரோனா பாதிப்பு பெற்ற, ஆனால் குறிகுணங்கள் இல்லாத நபர்களுக்கு அரசு வழங்க வேண்டும்; மானில அரசுக்கு பிரதமர் அலுவலகம் நேரடியாக இதனை பரிந்துரைக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார்; நவீன மருத்துவத்துடன் கூட்டாக, இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கும், மருந்தியல் ஆய்விற்கும் வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டிக் கொண்டார்.

முந்தைய காலங்களில் நம் மாநிலம் டெங்குவைக் கூட்டாக நவீன மருத்துவத்துடன் நிலவேம்பைச் சிறப்பாக கையாண்டதை பேராசிரியர் சுட்டிக் காட்டினார். பிரதமரும் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டார். 

ஆயுர்வேதத்தின் மூத்த பேராசிரியர்கள் தில்லியிலுள்ள திரிவ்யகுணா, பங்களூரின் யோகா பேராசிரியர் நாகேந்திரா மற்றும் ராஜீவ் கோவையின் ஆரிய வைத்யசாலாவின் மரு. கிருஷ்ணகுமார், ஹரித்வாரின் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, தில்லியின் பேரா ஹமீது, மத்திய பிரதேசத்தின் மரு.அனுரோக் ஷர்மா ஆகியோர் பிரதமரிடம் ஆயுர்வேத யோக முன்னெடுப்புக்களை மிகச்சுருக்கமாக தெரிவித்தனர்.

பிரதமர் அவர்கள் இந்த காலகட்டத்தின் சித்த, ஆயுர்வேத, யுனானி, யோகா, ஓமியோபதி துறைகளின் பங்களிப்பு முக்கியம். ஆனால் evidence based intervention and research இருக்க வேண்டும். அதைத்தான் உலகமும் நவீன மருத்துவமும் எதிர் நோக்கி இருக்கிறது என மறுபடி மறுபடி அழுத்திச் சொன்னார். 

வெகுசனம் தனித்திருக்கட்டும். இன்னும் 18நாள் அப்படித்தான் இருக்க வேண்டும். சித்த மருத்துவர்கள் தனித்திருப்பதோடு விழித்தும் பசித்தும் இருக்க வேண்டியகாலம். பாரபட்சமின்றி, மானுட நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு, அறிவியல் தரவுகளுடன், சித்த மூலிகை மருந்துகளைக் கொண்டு, நோய் எதிர்ப்பாற்றலினை வளர்க்க, வைரசை முடக்க நாம் ஆராயும் தருணம் இது.

பெரும் சிக்கலுக்குள் சென்றுவிடக்கூடாது என்பதுதான் அத்தனை பேரின் அடிமனது இறைஞ்சும் வேண்டுதல். ஒருவேளை பிற நாடுகள் போல் சவால் கூடினால், 12-25 இலட்சம் மக்கள் பாதிப்புக்குள்ளானால், நாம் ஒவ்வொருவரும் சித்த மருந்துகளைக் கொண்டு பெரும் மக்கள் துயர் துடைக்க களம் இறங்க வேண்டியிருக்கும். பிரதமரின் வீடியோ கலந்தாய்வின் முனைப்பை அப்படித்தான் பார்க்க வேண்டியுள்ளது என்கிறார் கு.சிவராமன்.