ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சிதைப்பதா...? சீமான் ஆவேசம்.

ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தை சிதைத்து பௌத்த விகாரையை நிறுவுவது தமிழர்களின் அடையாளங்களைச் சிதைத்து இனமழிப்புச் செய்ய முயலும் சிங்களப்பேரினவாதத்தின் கொடுஞ்செயல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஆவேசம் காட்டியிருக்கிறார்.


முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட குருந்தூர்மலை, குமுளமுனை உள்ளிட்ட தமிழர்களின் கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில் புராதான பௌத்த விகார்கள் இருந்ததெனக் கூறி, அதனைத் தொல்பொருள் ஆய்வு செய்ய முயலுவதாய்ப் பொய்யுரைத்து தமிழர்களின் வழிபாட்டுத்தலங்களை இராணுவத்தின் உதவியுடன் இடித்துத் தகர்க்கும் சிங்களப் பேரினவாத அரசின் கொடுஞ்செயல்கள் வன்மையான கண்டனத்திற்குரியது.

ஈழ நிலத்தில் 2 இலட்சம் அப்பாவி தமிழர்களைத் துள்ளத்துடிக்கப் படுகொலை செய்து முடித்த பிறகும், தமிழர்கள் மீதான வன்மமும், இனத்துவேசமும் துளியும் அடங்காது இனமழிப்பு நடவடிக்கையைத் தொடர்ச்சியாக அரங்கேற்றி வருவதன் நீட்சியாக, தமிழர் அடையாள சிதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களையும், தொன்மச்சான்றுகளையும் மெல்ல மெல்ல அழிக்கும் கொடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது சிங்களப்பேரினவாத அரசு.

குருந்தூர் மலையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டு, அங்கிருந்த சூலம் ஒன்றும் உடைத்தெறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, குருந்தூர் தொடர்பான வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு முல்லைத்தீவு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தமிழர்களுக்குச் சொந்தமான ஆலயத்தில் மக்கள் வழிபடலாம்;

அதைத்தவிர வேறு எவ்விதக் கட்டுமானங்களையும் இரு சாராரும் செய்யமுடியாது; தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்வதாக இருந்தால் யாழ் பல்கலைக்கழகத் தொல்லியல்துறை துணையோடு மட்டுமே செய்ய வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், அதையும் மீறி இராணுவத்தின் துணையோடு தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் பௌத்த விகாரையை நிறுவ முயல்வது முழுக்க முழுக்கத் தீவிர சிங்களமயமாக்கல் நடவடிக்கையே அன்றி வேறில்லை.

இதனைத் தாயகத் தமிழகத்தில் வாழும் தமிழர்களும், உலகெங்கும் வேர்பரப்பி வாழும் தமிழர்களும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இனியும் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துகொண்டு கடந்துபோவோம் எனச் சிங்கள ஆட்சியாளர்கள் எண்ணுவார்களேயானால் அவர்களது எண்ணம் தவிடுபொடியாகும் நாள் வெகுதொலைவிலில்லை. சிங்கள ஆட்சியாளர்களின் இத்தகையப் வன்மப்போக்குகளும், இனவெறி நடவடிக்கைகளும், இனமழிப்பு செயல்பாடுகளும் தொடரும்பட்சத்தில் அதற்கான எதிர் விளைவுகளைப் பெருமளவில் சந்திக்க நேரிடும் என எச்சரித்திருக்கிறார்.