காருக்குள் இருந்து சட்டை இல்லாமல் ஓடிய குவைத் ரிட்டர்ன்! துரத்தி துரத்தி வெட்டிய நபர்கள்! தலைமறைவான 2வது மனைவி! தஞ்சை பகீர்!

கணவரை மனைவியே கூலிப்படை அமைத்து கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவது தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விளார் சாலையில், காயிதே மில்லத் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு யூசுப் என்பவர் வசித்து வருகிறார். யூசுஃபின் வயது 45. இவருடைய 2-வது மனைவியின் பெயர் அசிலா. சில நாட்களுக்கு முன்னால் மதிய வேளையில் யூசுப் தஞ்சாவூர்-திருச்சி நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர்கள் சிலர் காரை வழிமறித்து யூசுப்பை சரமாரியாக வெட்டியுள்ளனர். காரிலிருந்து வெளியேறி யூசுப் தஞ்சாவூர் சாலையை நோக்கி ஓடியுள்ளார். அப்போதும் மர்மநபர்கள் அவரை பின்தொடர்ந்து சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். படுகாயமடைந்த யூசுப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

எப்பொழுதும் பரபரப்பாக இருக்கக்கூடிய அந்த பகுதியில் பட்டப்பகலில் எவ்வாறு கொலை நிகழ்ந்தது என்பது குறித்து அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் யூசுஃபின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. யூசுப் பிறப்பால் கிறிஸ்தவர் ஆவார் என்பதும் அவருடைய பெயர் ஜோசப் என்பதும் தெரியவந்தது. குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்தார். அப்போது இலங்கை நாட்டை பூர்வீகமாக கொண்ட அசிலா என்ற பெண்ணும், ஜோசப் உடன் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இருவரும் நன்கு அறிமுகமாகி நெருக்கமாகினர். 

நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஜோசப் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இஸ்லாம் மதத்திற்கு மாறி, தன்னுடைய பெயரை யூசுப் என்று மாற்றிக்கொண்டு அசிலாவை திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் இந்தியா வந்து தஞ்சாவூரில் வாழ்ந்து வந்தனர்.

திருமணமான சில ஆண்டுகளிலிருந்தே இருவருக்குமிடையே கடுமையான தகராறுகள் ஏற்பட்டு வந்தன. அசிலாவின் சொத்துக்களை கேட்டு யூசுப் அவரை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. 2 முறை தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் யூசுப் மீது அசிலா புகார் அளித்தார். பின்னர் இருவரும் பிரிந்து வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். 

யூசுஃப் கொலை வழக்கில் அசிலாவுக்கு தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்த முயன்றனர். அப்போதுதான் அவர் தலைமறைவாகிவிட்டது காவல்துறையினருக்கு தெரியவந்தது. தற்போது அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியை காவல்துறையினர் தீவிர ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கொலையானது தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.