கைக் குழந்தை கொடூர கொலை! பிறகு தற்கொலை! கணவனை நேரில் பார்க்க பயந்து மனைவி எடுத்த விபரீத முடிவு!

ஏழு மாத குழந்தையை தாய் ஒருவர் தண்ணீர் தொட்டியில் அழுத்தி கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது வேலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் சத்தியமங்கலம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பவித்ரா என்ற பெண் வசித்து வருகிறார். ஆற்காட்டில் உள்ள மேலக்குப்பத்தில் பிறந்தவர் சுரேஷ். இவர் மத்திய பாதுகாப்பு படை காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவ்விருவருக்கும் ஒன்றரை ஆண்டுகள் முன்னர் திருமணம் நடைபெற்றது. தற்போது சுரேஷ் ஜார்க்கண்டில் பணியாற்றி வருகிறார்.

8 மாதங்களுக்கு முன்னர், பவித்ரா ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். அந்த குழந்தைக்கு விஷ்வா என்று பெயர் சூட்டினர். சில மாதங்களாக கணவன் மனைவியிடையே ஏகப்பட்ட தகராறுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பவித்ரா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். தாய் வீட்டிற்கு சென்ற பின்னரும் பவித்ரா மிகவும் மனமுடைந்தே காணப்பட்டிருந்தார்.

கடந்த மாதம் 30-ஆம் தேதியன்று, பவித்ராவின் பெற்றோர் வழக்கம்போல் பணிக்கு சென்றனர். மனஉளைச்சல் அதிகமானதால், பவித்ரா தற்கொலை செய்து கொள்ள எண்ணினார். மேலும் தன் குழந்தை அனாதையாகிவிடும் என்று எண்ணிய அவர், குழந்தையை தண்ணீர் தொட்டியில் அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்று வேலை முடித்து வந்த பவித்ராவின் தாயார், பவித்ரா பிணமாக தொங்கி கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தார். மேலும் குழந்தையை தேடியபோது, தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அப்பகுதி காவல் நிலையத்தில் பவித்ராவின் தாயார் புகார் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. 29-ஆம் தேதி ஜார்க்கண்டில் இருந்து மனைவி மற்றும் குழந்தையை பார்க்க சுரேஷ் ரயிலில் கிளம்பியுள்ளார். அவரை காண பயந்து மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

ஆனால் எதற்காக கணவனை பார்க்க மனைவி பயந்தார் என்பது மர்மமாக உள்ளது. இந்த சம்பவமானது வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.