காதல் கணவன் கொடூர கொலை! கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை! ஓராண்டுக்கு பிறகு சிக்கிய இளம் பெண்!

தஞ்சை அருகே ஒரு பெண் கள்ளக் காதலனுடன் சேர்ந்து காதல் கணவனைக் கொன்ற சம்பவம் ஓராண்டுக்குப் பின் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மதுரையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி இளஞ்செழியன். இவர் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் கட்டிட வேலைக்குச் சென்றபோது அந்த ஊரைச் சேர்ந்த ரேவதி என்ற பெண்ணை காதலித்து கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

 

இருவரும் அம்மாபேட்டையிலேயே வசித்து வந்தனர். அப்போது  இளஞ்செழியனின் நண்பர் இளவழகனுடன் ரேவதிக்கு தவறான தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனை இளஞ்செழியன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் இளஞ்செழியனைக் காணவில்லை. இதுகுறித்து இளஞ்செழியனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். 

 

நீதிமன்ற உத்தரவின் பேரில் இளஞ்செழியனை தேடும் பணியையும், விசாரணையையும் போலீசார் தீவிரப்படுத்தினர். ரேவதியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரேவதியிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது அவர் அனைத்து விவரங்களையும் ஒப்புக்கொண்டார். 

 

ஓராண்டுக்கு முன்பு ரேவதியின் கள்ளக்காதலன் இளவழகன், அவரது நண்பர் கலியபெருமாள், ஆட்டோ ஓட்டுநர் மணி ஆகியோர் இளஞ்செழியனை கொலை செய்து, உடலை மின்னாத்தூரில் உள்ள கால்வாய் குழாய் ஒன்றில் போட்டது விசாரணையில் தெரிய வந்தது. 

 

இதையடுத்து போலீசார் அங்கு சென்ற போது ஒராண்டுக்கு முன் வீசப்பட்ட அந்த உடல் சிதைந்து எலும்புக் கூடாகி இருந்தது. கொலைக்கு காரணமான ரேவதி, கள்ளக்காதலன் இளவழகன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.