நம் உடலே கோவில்! உள்ளமே தெய்வம்! எப்படி தெரியுமா?

கடவுள் குடியிருக்கும் கோவிலுக்கும், மனித உடம்பிற்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது.


'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே' 

என்பது திருமூலர் அருட்பாடல். 

அவர் உடலே கோயில் என்றார். உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது என்பதை 'க்ஷேத்திரம் சரீரப் பிரஸ்தாரம்' என்கிறது ஆகமச் சொற்றொடர்.

உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிருத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகாமண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.

கோயில் அமைப்பில், உடலில் அன்னமய கோசம், பிரணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் ஆகிய ஐந்து உள்ளது போல கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. 

தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் போல ஐந்து சபைகள் உள்ளன. 

உடலில் உள்ள மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்கள் போலக் கருவறை, அர்த்த மண்டபம் முதலான ஆறு நிலைகள் உள்ளன. 

கருவறை சிரமெனப்பட்டது. அதில் வலச்செவி தட்சிணாமூர்த்தி, இடச்செவி சண்டிகேசுவரர், புருவமத்தி லிங்கம், மூக்கு ஸ்தபந மண்டபம், வாய் ஸ்தபந மண்டப வாசல், கழுத்து நந்தி தலையின் உச்சி விமானம் என்று ஆகம சாத்திரம் தெரிவிக்கிறது. 

ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம், கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன் விளங்கும். 

மேலும் நம் உடல் தோல், இரத்தம், நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது போல் ஆலயமும் செங்கல், காரை, கல், போன்ற ஏழு வகையான பொருள்களால் ஆனது என்கிறது நமது சாத்த்ரங்கள். 

கோயில் என்பதை கோஇஇல் எனப் பிரித்து 'கோ' என்றால் இறைவன். இல் என்றால் இருப்பிடம் என்கிறார்கள். ஆக, கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் என்றும் ஆலயம் என்பதை '' ஆன்மா என்றும் லயம் சேருமிடம் என்றும் பொருள்படுகிறது.