அர்ச்சகர் மரணத்துக்குப் பதறும் நாம் ஏன் துப்புரவு தொழிலாளி மரணத்தை கண்டுகொள்வதில்லை? மனதை உறுத்தும் பதிவு!

அர்ச்சகர் பூஜை செய்யும் போது வழுக்கி விழுந்து மரணம் என்றதும் அதிர்ச்சி அடையும் மனிதர்கள், துப்புரவு தொழிலாளி பாதாள சாக்கடையில் விஷ வாயு தாக்கி மரணம் என்ற செய்தியைப் படிக்கும்போது ஏன் அதிர்ச்சி அடைவதில்லை தெரியுமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் -தோழர் விஜயபாஸ்கர் விஜய்


ஏனென்றால், ஆஞ்சநேயர் சிலைக்கு பூஜை செய்யும் போது எட்டடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து அர்ச்சகர் வெங்கடேசன் என்பவர் உயிர் இழக்கிறார். உடனே அவருக்கு முதல்வர் அவர் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி உதவி கொடுக்கிறார்கள். ஊடகங்கள் எல்லாம் அதை மிகப்பெரிய செய்தியாக்கி பரப்பரப்பாக்குகின்றன. மக்கள் அர்ச்சகருக்கு நிதி கொடுக்கிறார்கள்.

ஆனால் நாட்டில் வருடத்துக்கு சராசரியாக 1300 இந்தியர்கள் மலக்குழியில் இறங்கி பாதாள சாக்கடையில் இறங்கி விஷக்காற்று பட்டு இறந்து போகிறார்கள். அவர்களுக்கு உடனே அரசாங்கம் குறைந்தபட்சம் பத்து லட்சமாவது பணம் கொடுக்க வேண்டும். ஆனால் கொடுக்காது. மக்களாகிய நாம் பாதாள சாக்கடை சுத்தம் செய்பவர்களின் மரணத்தை கண்டுகொள்ள மாட்டோம்.

ஏனென்றால் அந்த செய்தி மக்கள் மனதில் படியாது, மக்களை வருத்தப்பட வைக்காது. அந்த செய்தியை ஒட்டி மக்கள் ஒரு பைசா நிதி அனுப்பமாட்டார்கள். அரசாங்கம் நிதி கொடுக்காது.  அரசு இயந்திரம் வேகமாக இயங்கி வருங்காலத்தில் அது நடக்காதது மாதிரி எதுவும் செய்து கொடுக்காது.

இத்தனைக்கும் பாதாள சாக்கடை அடைப்பு எடுப்பது என்பது சமூகத்துக்கு மிக மிக அவசியமான சேவையாகும். சட்டப்படி அதை செய்ய கூடாது. அதை செய்ய வைக்க கூடாது. ஆனாலும் வேறு வழியில்லை என்று நாம் அனைவரும் அந்த விதியை தளர்த்தி ஊரில் யார் இளிச்சவாய் மனிதனோ அவரை இறக்குகிறோம். எவ்வளவு பக்காவாக க்ரைம் செய்கிறோம் பாருங்கள். இதில் ஒன்று கூட நம் மனதை உறுத்தாது.

ஆனால் அர்ச்சகர் ஆஞ்சிநேயருக்கு துளசி மாலை போடும் போது கீழே விழுந்து இறந்தால் முதல்வரில் இருந்து மொத்த சமூகமும் இரங்கும், கொதிக்கும், அவருக்கான நட்ட ஈடை நிதியாக வசூலித்துக் கொடுக்கும்.

ஒரு மனிதனுடைய உயிரும் இன்னொரு மனிதனுடைய உயிரும் ஒன்றில்லை என்றாகிவிடுவது பற்றி நமக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை. அன்றாட வாழ்க்கையில் நீங்களும் நானும் எவ்வளவு பெரிய குற்றங்களை சுரணையே இல்லாமல் செய்து கொண்டிருக்கிறோம் கவனியுங்கள். அந்த சுரணையற்றதன்மையின் பின்னால் இருக்கும் உளவியலை தைரியமாக உற்று கவனியுங்கள் என்கிறார். நியாயமான பதிவு.