உங்கள் இல்லத்தின் தாய் சுவர், தந்தை சுவர் எதுவென தெரியுமா? வெற்றி தரும் சுவர் ஜோதிடம் இதோ!

'பொன் போன்ற பூமியில், நாம் வாங்கும் ஒவ்வொரு சதுர அடியையும் வீணடிக்காமல் அனைத்து இடத்தையும் வீடாகவே கட்டிக்கொள்ள வேண்டும்" என்ற எண்ணத்தில் தான் பெரும்பான்மையான மக்கள் இருக்கின்றார்கள்.


ஆனால், இக்கருத்து சரியானது அல்ல. ஒவ்வொரு வீட்டிற்கும், அலுவலகத்திற்கும், நிறுவனத்திற்கும் 'மதில்சுவர்" என்பது மிக மிக முக்கியமானதாகும்.தாய்-தந்தை : ஒரு வீட்டின் நான்கு பக்க சுவரும் 'தாய் சுவர்" எனப்படும். அதுபோல மதில்சுவர் என்பது 'தந்தை சுவர்" எனப்படும். ஒரு குடும்பத்தில் தாய் எவ்வளவு முக்கியமோ, அதேஅளவு தந்தையும் முக்கியம்.

தாய் மட்டும் வளர்க்கும் பிள்ளைக்கும், தாய்-தந்தை இருவரும் சேர்ந்து வளர்க்கும் பிள்ளைக்கும் நிச்சயமாக வேறுபாடு இருக்கும். இதேபோல, மதில் சுவருடன் கட்டப்பட்ட வீட்டில் வசிப்பவர்களுக்கும், மதில்சுவர் இல்லாத வீட்டில் வசிப்பவர்களுக்கும் நிறைய, நிறைய வேறுபாடுகள் இருக்கும். 

மதில்சுவர் ஏன் அவசியம்- ஒவ்வொரு நாட்டிற்கும் எல்லை உண்டு. 'எல்லைக்கோடு" ஒரு நாட்டை மற்றொரு நாட்டிலிருந்து பிரிக்கின்றது. ஒரு நாட்டிற்கே எல்லை அவசியமாகும்போது ஒவ்வொரு வீட்டிற்கும் எல்லையாக மதில்சுவர் இருக்க வேண்டியது அதி அத்தியாவசியமாகின்றது. வெளிப்புற காரணிகளில் இருந்து ஒரு வீட்டை காப்பதில் முக்கிய பங்காற்றுகிறது இந்த மதில்சுவர். 

அத்தோடு இம்மதில்சுவர், பிரபஞ்ச ஆற்றலை கிரகித்து வீட்டிற்கு எடுத்து வரும் மிக முக்கியமான வேலையை செய்கின்றது. உடல் மேல் படர்ந்துள்ள தோல், நம்மை வெயிலிலிருந்தும், குளிரிலிருந்தும் எவ்வாறு பாதுகாக்கின்றதோ அதேபோல ஒரு வீட்டையும் மதில்சுவர், தீய சூழ்நிலைகளில் இருந்து காப்பாற்றுவதில் பெரும் பங்காற்றுகிறது. 

மதில்சுவர் இல்லாவிட்டால் நிகழும் தவறு என்ன - பிரபஞ்ச ஆற்றல் வீட்டில் நுழைவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடும். எந்தவொரு நல்ல விஷயமும் நடப்பதற்கு காலதாமதம் ஆகும். தடைகளும், போராட்டங்களும் இருந்து கொண்டே இருக்கும். மனநிம்மதியின்மையும், ஆரோக்கிய குறைபாடும் ஏற்படும். தொழில் முன்னேற்றமின்மை, பணவரவின்மையும் ஏற்படும். எதிர்பாராத இழப்புகளை அவ்வீட்டில் வசிக்கும் மக்கள் சந்திக்க நேரிடும். 

எனவே மதில்சுவர், ஒரு வீட்டிற்கு பாதுகாப்பை மட்டுமல்லாது மகிழ்ச்சியை வழங்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. பிரம்மாண்ட வெற்றி பெற மதில்சுவர் அதிஅத்தியாவசியமாக உள்ளது.