ஒரே நாளில் தமிழகத்தில் 52 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 47 பேருக்கு..! தலைநகரில் கொரோனா வேகமாக பரவுவது ஏன்? பரபர காரணம்!

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா கிட்டத்தட்ட கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மட்டும் கொரோனா நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.


தமிழகத்தில் இதுவரை சுமார் 1900 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சென்னையில் மட்டும் 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. உதாரணத்திற்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சுமார் 72 பேருக்கு கொரோனா உறுதியானது.

இவர்களில் 52 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதே போல் நேற்று 52 பேருக்கு தமிழகம் முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 47 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். எஞ்சிய ஐந்து பேர் மட்டுமே வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள். கடந்த சில நாட்களை ஒப்பிடுகையில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா அதிகமாகியுள்ளது.

இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள வாழ்க்கை முறை, சமூக நிலை போன்றவை தான் சென்னையில் கொரோனா பரவ காரணம் என்கிறார்கள். சென்னையில் மட்டும் அல்லாமல் மும்பை, இந்தூர், டெல்லி போன்ற பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க மக்கள் நெருக்கமாக வசிப்பது தான் என்கிறார்கள்.

புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் மக்கள் நெருக்கம் குறைவு. ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான இடைவெளி இருக்கிறது. இதே போல் மக்கள் நெருக்கம் குறைவு என்பதால் கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு குறைந்துவிடுகிறது. ஆனால் சென்னையில் வீடுகள் மிக நெருக்கமாக உள்ளனர். மக்கள் தொகையும் அதிகம்.

இதனால் தான் சென்னையில் கொரோனா வேகமாக பரவுகிறது. மக்கள் பொறுப்பு உணர்ந்து வீட்டில் தங்களை தனிமைபப்டுத்திக் கொண்டால் தான் கொரோனாவில் இருந்து சென்னை தப்பும்.