சந்திரயான் 2 நிலவில் தரையிறங்க முடியாமல் போனது ஏன்? கடைசி திக் திக் நிமிடங்களில் என்ன நடந்தது?

சந்திரயான் 2 நிலவில் தரையிறங்க முடியாமல் போனது ஏன் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சந்திரயான் 2ஐ இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 23ந் தேதி விண்ணுக்கு அனுப்பியது. முதலில் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக சந்திரயான் 2ஐ விண்ணில் அனுப்புவதற்கான ஏற்பாடு நடைபெற்றது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த ஏற்பாடு ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டது.

பிறகு கூறிய படி சரியாக சந்திரயான் 2 ஜூலை 23ல் விண்ணிற்கு சென்றது. வெற்றிகரமாக சந்திரயான் 2ல் இருந்து லேண்டர் விக்ரம் பிரிந்தது. நிலவையும் லேண்டர் விக்ரம் சரியான தொலைவில் அணுகியது. விண்ணில் இருந்து பூமி, நிலவு போன்றவற்றை கூட சந்திரயான் 2 புகைப்படம் எடுத்து அனுப்பியது.

இதனால் அனைத்து சுபமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தினால் செப்டம்பர் 7 அதிகாலை 1.55 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. அதன்படி, அனைத்தும் சரியாக சென்று கொண்டிருந்தது. சுமார் 100 கி.மீ தொலைவில் நிலவை சுற்றி வந்த லேண்டர் விக்ரம் என்ஜின் இயக்கப்பட்டு மெல்ல நிலவின் தரையை நோக்கி இறக்கப்பட்டது.

சரியாக நிலவின் தரையை அடைய 2.1 கிமீ எனும் தொலைவு மட்டுமே இருந்தது. அப்போது தான் திடீரென விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பு பெங்களூரில் உள்ள செயற்கை கோள் கட்டுப்பாட்டு அறையுடன் துண்டிக்கப்பட்டது. எவ்வளவோ முயன்றும் லேண்டருடனான தொடர்பை விஞ்ஞானிகளால் மீண்டும் பெற முடியவில்லை.

இதனால் சந்திரயான் 2 மூலம் அனுப்பி வைக்கப்பட்ட லேண்டர் விக்ரம் மற்றும் அதற்குள் இருக்கும் ஆய்வூர்தி பிரக்யானுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. பொதுவாக தகவல் தொடர்பு துண்டிக்கப்படுகிறது என்றால் லேண்டர் விக்ரம் நிலவில் வேகமாக தரையிறங்கியிருக்கலாம் அதன் மூலமான அதிர்வால் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

தவிர கடந்த ஜனவரியில் இஸ்ரேல் அனுப்பிய விண்கலமும் இதே போல் கடைசி நேரத்தில் தகவல் தொடர்பை இழந்தது. பிறகு அந்த விண்கலம் நிலவில் தரையில் மோதி சிதைந்த பாகங்களாக இருந்ததை நாசா செயற்கை கோள் மூலம் புகைப்படமாக எடுத்து வெளியிட்டது.