IPL ஏலம்: ரூ.8.4 கோடிக்கு விலை போன தமிழக வீரர் வருண்! ஏன் தெரியுமா?

சர்வதேச போட்டிகளில் எதிலும் களம் இறங்காத தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை ஐ.பி.எல் ஏலத்தில் பஞ்சாப் அணி ரூ.8.4 கோடிக்கு வாங்கியதற்கான காரணம் தெரியவந்துள்ளது.


20 லட்சம் ரூபாய் அடிப்படை விலை என்ற நிலையில் வருண் சக்ரவத்தி ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டார். உடனடியாக ரூ.25 லட்சமாக ரேட்டை உயர்த்தியது டெல்லி அணி. உடனடியாக சென்னை அணியும் வருணுக்கான ரேட்டை ரூ.30 லட்சமாக அதிகரித்தது. இரண்டு அணிகளும் மாறி மாறி வருண் சக்ரவத்திக்கான ரேட்டை உயர்த்திக் கொண்டே போயினர்.

   டெல்லி அணி ஒரு கட்டத்தில் ரூ.3.4 கோடியாக வருணுக்கு விலையை நிர்ணயித்தது. இதற்கு மேல் அதிக தொகை கொடுக்க வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சென்னை அணி போட்டியில் இருந்து விலகிறது.இதனால் மூன்று கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு வருண் விலை போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பஞ்சாப் அணி திடீரென வருணுக்கான போட்டியில் டெல்லியுடன் மோதியது.

   இரண்டு அணிகளும் பத்து பத்து லட்சம் ரூபாயாக விலையை உயர்த்திக் கொண்டே சென்றனர். ஒரு கட்டத்தில் நான்கு கோடியே 80 லட்சம் ரூபாய் வரை வருணுக்கான ஏலத் தொகை அதிகரித்தது.இதனால் டெல்லி அணி போட்டியில் இருந்து விலகிறது. பஞ்சாப் அணி 4 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு வருணை கேட்டிருந்த நிலையில் திடீரென களம் இறங்கிய கொல்கத்தா அணி வருணுக்கான ரேட்டை ஐந்து கோடி ரூபாய்க்கும் அதிகமாக்கியது.

   பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மாறி மாறி ரேட்டை உயர்த்தியதில் ஆறு கோடி, ஏழு கோடி என ஒரு கட்டத்தில் எட்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை வருணுக்கு நிர்ணயிக்கப்பட்டது. எட்டு கோடியே 40 லட்சம் ரூபாய் என பஞ்சாப் விலை கேட்ட பிறகு வருணுக்கான போட்டியில் இருந்து கொல்கத்தா விலகியது. இதனால் எட்டு கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு வருண் பஞ்சாப் அணிக்கு சென்றுவிட்டார்.

   சர்வதேச போட்டிகளில் ஒன்றில் கூட களம் இறங்காத ஏன் ஐ.பி.எல் போட்டிகளில் கூட விளையாடாத வருணுக்கு 8 கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்து பஞ்சாப் வாங்கியதன் பின்னணியில் அந்த அணியின் கேப்டனும் மற்றொரு தமிழக வீரருமான அஸ்வின் இருக்கிறார். தமிழ்நாடு ப்ரீமியில் லீக்கின் போது வருணின் திறமையை பார்த்து வியந்தே அவரை பஞ்சாப் அணிக்காக வாங்கியே ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருந்துள்ளார் அஸ்வின்.

   இதனால் தான் ஏலத்தொகை எட்டு கோடி ரூபாயை கடந்த பிறகும் வருணை விடாமல் வசப்படுத்தியுள்ளது பஞ்சாப் அணி. இதே போல் சென்னை அணியும் வருணை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டியதற்கான காரணம் அவரது டி.என்.பி.எல் பெர்பார்மன்ஸ் தான். முதல் இரண்டு டி.என்.பி.எல் சீசனில் ஒன்றில் கூட வெற்றி பெறாத மதுரை அணி மூன்றாவது சீசனில் கோப்பையை கைப்பற்ற வருண் முக்கிய காரணம்.

   மிஸ்ட்ரி ஸ்பின்னர் என்று அழைக்கப்படும் வருண் எட்டு விதமாக பந்து வீசக்கூடியவர். டி.என்.பி.எல்லில் ஒட்டு மொத்தமாக பத்து போட்டிகளில் விளையாடிய வருண் ஒன்பது விக்கெட்டுகளை சாய்த்து வெறும் 188 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். மேலும் இவரது எகானமி வெறும் நான்கு ரன்கள் தான். அதாவது ஒரு ஓவருக்கு நான்கு ரன்களை மட்டுமே இவர் விட்டுக் கொடுத்துள்ளார்.

   அதிலும் 20 ஓவர் போட்டிகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் டெத் ஓவர்களை சிறப்பாக வீசுபவர் வருண் சக்ரவர்த்தி. இதனை எல்லாம் தெரிந்து தான் வருண் சக்கரவர்த்திக்கு எட்டு கோடியே ரூபாயை கொட்டிக் கொடுத்துள்ளது பஞ்சாப் அணி. சென்னை அணி மோஹித் ஷர்மாவுக்கு 5 கோடி ரூபாய் கொடுத்துவிட்டதால் வேறு வழியில்லாமல் வருணை மிஸ் செய்துள்ளது.