தி.மு.க கூட்டணியில் கலகம் தொடங்கியது! நிர்மலா சீதாராமனை வைகோ சந்தித்ததன் பரபரப்பு பின்னணி!

மோடி தமிழகத்துக்கு வரும் நேரத்தில் எல்லாம் கருப்பு பலூன் ஊதுவதில் பிசியாக இருக்கும் வைகோ, திடீரென நிர்மலா சீதாராமனை சந்தித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


கடந்த தேர்தல் நேரத்தில் நரேந்திர மோடியை பிரதமர் பதவியில் அமரவைப்பதுதான் தன்னுடைய ஒரே குறிக்கோள் என்று அயராதுபாடுபட்டவர் வைகோ. அவருடைய கூட்டணியால் தமிழகத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றது. நல்லவேளையாக மற்ற மாநிலங்களில் வைகோவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் மோடி பிரதமர் பதவிக்கு வந்தார். 

அதன்பிறகு கூட்டணி உடைந்துபோனதால் தி.மு.க. கூட்டணிக்குத் திரும்பியிருக்கிறார் வைகோ. கஜா புயலை பார்வையிடாத மோடி, நீட் தேர்வை கொண்டுவந்த மோடி, கருப்புப் பணத்தை பிடிப்பதாகச் சொல்லி ஏமாற்றிய மோடி, 10 சதவிகித பொருளாதார இட ஒதுக்கீடு கொண்டுவந்த மோடி _ தமிழகத்தின் பக்கம் தலைவைத்து படுக்கக்கூடாது என்பதற்காக கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வருகிறார்.

தரைவழி வந்தால் கருப்புக்கொடி போராட்டம் சரியாக இருக்கும். ஆனால், மோடியோ வான் வழியே வந்து செல்கிறார் என்பதால், வானத்தில் கருப்புக்கொடி கட்ட முடியாது என்பதால் கருப்பு பலூன் ஊதி வானத்திற்கு அனுப்பி கடுமையாக எதிர்த்து வருகிறார். சமீபத்தில் மதுரைக்கு வந்தபோதும் கருப்பு பலூன் காட்டினார்.

அடுத்து வரும் 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் வருகிறார். அப்போதும் கருப்புக்கொடி காட்டுவேன் என்று பொங்கியிருந்தார் வைகோ. இந்த சூழ்நிலையில்தான் திடீரென மத்திய ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இயல்பாக வைகோ சந்தித்து மகிழ்வுடன் பேசும் புகைப்படம் வெளிவந்துள்ளது.

நிர்மலா சீதாராமன் இந்தப் படத்தை வெளியிட்ட காரணத்தால், இனிமேல் மோடி வரும்போது கருப்புக்கொடி காட்டும் திட்டத்தை வைகோ கைவிட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், இது குறித்துப் பேசியிருக்கும் வைகோ, ‘சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகள் பிரச்னையைப் பேசுவதற்காகத்தான் நிர்மலாவை பார்த்தேன் என்று அலறியிருக்கிறார்.

ஆக, கருப்பு பலூன் மீண்டும் பறக்குமா என்பதை 10ம் தேதி பார்த்துவிடலாம். அதே சமயம் தி.மு.க கூட்டணியில் கலகத்தை ஏற்படுத்த டெல்லியில் ஒரு பெரிய திட்டம் தீட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது வரை கூட்டணியில் ம.தி.மு.க இருப்பதை தி.மு.க உறுதிப்படுத்தவில்லை. இதனால் வைகோவை வைத்து கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிப்பதாக சொல்கிறார்கள். 

வைகோவும் கூட தி.மு.க தரப்பை மிரட்டி பார்க்கும் வகையில் தான் பா.ஜ.கவின் மிக முக்கியமான நபரை டெல்லியில் சந்தித்து திரும்பியுள்ளார். பட்டாசு தொழிலுக்கும் ராணுவ அமைச்சருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் தமிழக அரசியல் நிலவரத்தை பொறுத்தவரை நிர்மலா சீதாராமன் தான் மேலிடப்பார்வையாளர் போல் கவனித்து வருகிறார்.

எனவே தி.மு.க கூட்டணியில் ஏற்கனவே பா.ம.க இணைய உள்ளதாக வெளியாகும் தகவலால் திருமா அதிருப்தியில் உள்ளார். இந்த நிலையில் வைகோவை வைத்து ஏதேனும் கேம் விளையாடலாம் என்று பா.ஜ.க நினைத்ததன் விளைவே டெல்லி சந்திப்பு என்கிறார்கள்.