சிவனின் ரிஷப வாகனம் உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா?

ரிஷப வாகனம் அல்லது விடை வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சிவபெருமான் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இந்து சமய புராணங்களிபடி ரிஷபம் என்பது சிவனின் வாகனம் ஆகும்.


ரிஷபம் என்றால் காமம் என்ற பொருளும் உண்டு. சிவன் காமனை அடக்கியவர். அதாவது, ஆசைகளை அடக்கியவர் என்பது இதன் பொருள். காளையை தர்மத்தின் சின்னமாக கருதுவர். தர்மம் என்பது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். காளை மாடு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, விவசாயப்பணி செய்கிறது.

இது தொண்டு மனப்பான்மையை குறிக்கும். அருமையான தானியத்தை விவசாயிக்கு கொடுத்து விட்டு வெறும் வைக்கோலையும், இலை தழைகளையும் அது சாப்பிடும். இதுபோன்ற மனநிலை மனிதனுக்கும் வர வேண்டும். நம்மிடம் எவ்வளவு உயர்ந்த பொருள் இருந்தாலும், அதை பிறர் நலனுக்காக இழக்க தயங்கக் கூடாது.

காளை, அழுத்தம் மிகுந்த நிலத்தை கஷ்டப்பட்டு உழுகிறது. அதற்காக மறுநாள் அது தன் கடமையிலிருந்து விலகுவதில்லை. மனிதனும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், கடமையிலிருந்து விலகக்கூடாது. இதை உலகுக்கு அறிவிக்கவே, காளை மாட்டை தனது வாகனமாக வைத்திருக்கிறார்.

ஒருமுறை தர்மதேவதை.. இந்த உலகில் தான் அழியாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினாள். இதற்காக பரம்பொருளாகிய சிவபெருமானை வேண்டி கடும் தவம் இருந்தாள். சிவபெருமானும் தர்மதேவதையின் தவத்தால் மனம் மகிழ்ந்தார். பின்னர் அவள் முன் தோன்றிய சிவபெருமான், தர்மதேவதையிடம் தவம் இருந்ததற்கான காரணத்தைக் கேட்டார்.

அப்போது தர்மதேவதை சிவபெருமானை நோக்கி இரு கரம் கூப்பி வணங்கினாள். பின்னர், ‘எம்பெருமானே! எல்லா உயிரின் தேவ வடிவமானவரே! நான் தங்களின் வாகனமாக தங்களுக்கு பயன்பட வேண்டும்’ என்றாள். இறைவனும் அந்த வரத்தை அவருக்கு அருளினார். தர்மதேவதை ரிஷப உருவம் கொண்டவள். இதனால் சிவ பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார்.

இது சாதாரண கருத்தை உணர்த்தவில்லை. இதனுள் மாபெரும் உண்மை உள்ளடங்கியுள்ளது. சிவன் வீற்றிருக்கும் வாகனம் சிவனுடைய பொருள் ஆகும். எனவே தர்மதேவதையின் ரிஷப வாகனமும் சிவபொருளாகி விடுகிறது. அதனால் அதற்கு அழிவு என்பது கிடையாது. உலகில் உள்ள எல்லா பொருட்களுக்கும் அழிவு உண்டு. ஆனால் தர்மத்திற்கு மட்டும் அழிவு என்பது இல்லை. இதனை உணர்த்தவே சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி உள்ளார்.