பிரதமர் பதவி மோடிக்கா? நிதின் கட்கரிக்கா RSS தீவிர ஆலோசனை!

எக்ஸிட் போல் முடிவுகளை அத்தனை பா.ஜ.க. தலைவர்களும் சந்தோஷமாக கொண்டாட, நிதின் கட்கரி மட்டும், ‘இதையெல்லாம் அப்படியே நம்பக்கூடாது’ என்று பேசினார். இவர் உண்மையிலே பி.ஜே.பி.தானா என்று அவரது கட்சியினரே ஆச்சர்யப்பட்டார்கள்.


ஆனால், அதையெல்லாம் நிதின் கட்கரி கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால், அவர் ஆர்.எஸ்.எஸ்.சின் செல்லப்பிள்ளை. மோடிக்குப் போட்டியாக ஆர்.எஸ்.எஸ். அடுத்த பிரதமராக கொண்டுவர விரும்புவது நிதின் கட்கரியைத்தான்.

யார் இந்த நிதின் கட்கரி? கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். நாக்பூர் என்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் புண்ணிய பூமி. அங்கு பாஜக வேட்பாளராக ஒருவர் களம் இறங்குவதற்கு அந்த இயக்கத்தின் ஆசிர்வாதம் தேவை. அந்த ஆசிர்வாதம் செல்லப்பிள்ளை நிதின் கட்கரிக்கு கிடைத்ததில் இருந்தே அவரது முக்கியத்துவத்தை உணர முடியும்.

மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலும் நடந்த நேரத்தில், கட்கரியை மகாராஷ்டிராவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என அம்மாநில பாஜகவிற்குள் குரல்கள் எழுந்தன. ஆனால் கட்கரி அதை விரும்பவில்லை. காரணம் அப்போது மோடியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக கட்கரி பொறுப்பிலிருந்தார். அதே நேரத்தில் மோடியும், கட்கரி மகாராஷ்ராவின் முதல்வராவதை விரும்பவில்லை. காரணம் நிதின் கட்கரிக்கு உள்ள கெட்டிக்காரத்தனம். முதல்வரான சில மாதங்களில் ஒட்டுமொத்த மாநிலத்தையும் கட்கரி தனதாக்கிவிடுவார். அதன் பின் கட்கரி அனுமதி இல்லாமல் மாநிலத்துக்குள் ஒன்றையும் சாதிக்கமுடியாது.

மகாராஷ்டிராவை தனதாக்கிக்கொள்வது என்பது மகாராஷ்டிராவை மட்டுமல்ல. அது மும்பையையும் சேர்த்தே குறிக்கும். மும்பையைக் கைப்பற்றுவது என்பது கார்ப்ரேட் உலகைக் கைப்பற்றுவது. இப்படி சட்டென்று வளர்ந்துவிடக் கூடாது என்றுதான் நிதின் கட்கரியை தங்கள் கைக்கு அருகிலேயே வைத்துக்கொண்டனர்.

வளர்ச்சித் திட்டங்களை கண்களுக்கு புலப்படும் அளவில் மக்கள் முன் மிகப்பெரிய விளம்பரமாக மாற்றக்கூடியத் துறை போக்குவரத்துத்துறைதான். மேலும் பெரும் அளவில் பணம் புரளும் ஒரு துறையும் கூட. அப்படிப்பட்ட ஒரு துறை நிதின் கட்கரிக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் மோடி நினைத்தது போல் இல்லை.. ஆம், கட்கரி மோடியை கண்டுகொள்ளாமல் தனியாக இயங்கத் தொடங்கினார். கட்கரிக்கு மோடி மீது எந்த பயமும் இல்லை. எப்போதெல்லாம் பிரதமர் அலுவலகம் கட்கரியின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டதோ அப்போதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். மூலம் அதை உடைத்தார். அவருக்கு மோடியின் மீது மரியாதை மட்டுமே இருந்தது, மற்றவர்களுக்கு இருந்த பயம் எப்போதும் இருந்ததில்லை.

தன்னை வளர்ச்சியின் முகமாக முன்னிறுத்திக்கொண்ட மோடியின் அமைச்சரவையிலேயே அவருக்குப் போட்டியாக ஒருவர் செயல்பட்டு, சாதித்தும் காட்டியுள்ளார். பாஜக அரசு தன் சாதனைகளாக இந்த 5 ஆண்டுகால ஆட்சியில் எதையேனும் காட்டவேண்டும் என்றால் கட்கரியின் போக்குவரத்துத் துறையின் சாதனைகளை மட்டுமே காட்டமுடியும். உண்மையில் வளர்ச்சிக்கான தலைவராக பாஜக ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்றால் அது கட்கரிதான்.

அதனால்தான் நிதின் கட்கரி என்ற துருப்புச்சீட்டை ஆர்.எஸ்.எஸ். பத்திரமாக வைத்திருக்கிறது. பெரும்பான்மை வெற்றி பெற்றால் பா.ஜ.க.வுக்கு அப்படியே மோடி தலைமைப் பொறுப்பு ஏற்பார். ஆனால், தொங்கு பாராளுமன்றம் என்றால், நிதின் கட்காரியே சாட்சி என்கிறார்கள். அதையும்தான் பார்த்துவிடுவோமே...