27 வயதில் அமைச்சர்! மோடியை அடையாளம் காட்டியவர்! யார் இந்த சுஷ்மா சுவராஜ்!

மறைந்த பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வழக்கறிஞராக தனது வாழ்வை தொடங்கிய வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றி மறைந்துள்ளார்.


ஆர்எஸ்எஸ் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்த சுஷ்மா ஸ்வராஜ் வழக்கறிஞராகி ஜார்ஜ் பெர்னாண்டசின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். மேலும் பெர்னாண்டசுக்காக பல்வேறு வழக்குகளில் இவர் ஆஜராகியுள்ளார்.

எமர்ஜென்சிக்கு பிறகு பாஜகவில் இணைந்த சுஷ்மா ஸ்வராஜ் துடிப்பான செயல்பாடுகள் மூலமாக 1977ம் ஆண்டு ஹரியானாவில் இருந்து முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வானார். அப்போது அவருக்கு வயது  வெறும் 25 தான்.

சிறப்பான செயல்பாடுகளால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஹரியானா கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார் சுஷ்மா. 1990ம் ஆண்டுகளில் தான் சுஷ்மா ஸ்வராஜ் தேசிய அரசியலில் தலைகாட்டத் தொடங்கினார்.

ஹரியானாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட சுஷ்மா பிறகு 1996 தேர்தலில் போட்டியிட்டு மக்களவை எம்பியானார். அப்போது 13 நாட்கள் மட்டுமே இருந்த வாஜ்பாய் அரசில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக செயல்பட்டவர் சுஷ்மா.

பிறகு டெல்லி முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்ட சுஷ்மா ஸ்வராஜ் சோனியாவை எதிர்த்து போட்டியிடுவதற்காக பெல்லாரியில் களம் இறக்கப்பட்டார். இதற்காக தனது முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இருந்தாலும் கூட தேர்தலில் சோனியாவிடம் சுஷ்மா தோல்வி அடைந்தார். பிறகு அமைந்த வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்ட சுஷ்மா 5 ஆண்டு காலம் தனது பதவியை பூர்த்தி செய்தார். இதன் பிறகு நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்கட்சி தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

2012ம் ஆண்டு வாக்கில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடியை முன்மொழிய பலரும் தயங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அத்வானி மோடியை முன்னிலைப்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்.

இந்த சமயத்தில் குஜராத் சென்ற சுஷ்மா ஸ்வராஜ் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது பாஜகவின் எதிர்காலத்திற்கு நல்லது என்கிற ரீதியில் பேசினார். இதனை தொடர்ந்தே மற்ற தலைவர்கள் அத்வானியை மீறி மோடி பின் அணிவகுக்க ஆரம்பித்தனர்.

இதன் பிறகு 2013ம் ஆண்டு மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது அதனை முன்மொழிந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். அந்த வகையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் வேட்பாளராக மோடியை அறிமுகம் செய்ததே சுஷ்மா தான்