கொரோனாவை கட்டுப்படுத்தி கெத்து காட்டிய எடப்பாடியார்..! ஆனால் அந்த ஒரு நபர் செய்த ஒரே ஒரு தவறு! கட்டுக்கு அடங்காமல் பரவும் பின்னணி!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தி அனைத்து மாவட்டங்களும் ஆரஞ்ச் மண்டலமாக மாறி பசுமை மண்டலமாக மாறிக் கொண்டிருந்த நிலையில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் கொரோனா அதிகரிக்க அந்த ஒருவர் செய்த ஒரே ஒரு தவறு தான் காரணம் என்று பேச்சுகள் அடிபட ஆரம்பித்துள்ளன.


தமிழகத்தில் முதல் கொரோனா உறுதி செய்யப்பட்ட அடுத்த நிமிடமே சுகாதாரத்துறை பம்பரமாக வேலை செய்ய ஆரம்பித்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவருமே வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களாக இருந்தனர். இந்த  நிலையில் தான் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மூலம் தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.

ஆனால் சுகாதாரத்துறை தீர்க்கமாக எடுத்த நடவடிக்கை மற்றும் தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த ஒத்துழைப்பால் அவர்கள் மூலமாக தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாகமால் தடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட சுமார் 35 முதல் 36 நாட்கள் வரை தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தது. கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா உறுதி செய்யப்படாமல் இருந்தது.

தருமபுரி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் கொரோனா குறைவாகவே இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முற்றிலும் அழிக்கப்பட்டு பசுமை மண்டலமானது. இதே போல் மற்ற மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் வேகமாக குணமாகி வீடு திரும்பி வந்தனர். இதனை மனதில் வைத்து தான் 3 நாட்களில் தமிழகத்தில் கொரோனா ஒழிக்கப்படும் என்று கெத்தாக அறிவித்தார் எடப்பாடியார்.

எடப்பாடியார் இப்படி அறிவித்தத போது பலரும் இதனை விமர்சித்தனர். குறிப்பாக திமுக தரப்பில் இருந்து கிண்டல்கள் அதிகமாக இருந்தன. ஆனால் எடப்பாடியார் இந்த விஷயத்தில் உறுதியுடன் இருந்தார். அங்கு தான் இத்தனை நாட்கள் விழிப்புடன் இருந்த முதலமைச்சர் அசந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

முதலமைச்சர் கூறிய மூன்று நாட்கள் முடிந்த பிறகு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை வேகமாக அறிவித்தது. அதுநாள் வரை ஒரு நாளைக்கு 30, 40 என கொரோனா உறுதியான நிலையில் 100, 200, 500 என கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர ஆரம்பித்தது. இதற்கு காரணம் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை. அங்கு வியாபாரிகளிடம் இருந்து கொரோனா வேகமாக பரவ ஆரம்பித்தது.

தற்போது சென்னையில் மட்டும் சுமார் 3000 கொரோனா நோயாளிகள் இருக்கின்றனர். அவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் கோயம்பேடு தொடர்புகள் என்கின்றனர். அதாவது சுமார் 1500 பேர் வரை கோயம்பேடு தொடர்புகள் மூலம் கொரோனாவிற்கு ஆளாகியுள்ளனர். இதே போல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர் வரை கொரோனா வேகமாக பரவி வருகிறது.

இந்த மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடு வந்து சென்றவர்களுக்கு தான் கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே தான் இந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது. பத்து நாட்களுக்கு முன்னர் வரை தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இப்போது கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.

இப்படி தமிழக நிலைமை மிக மோசமாக காரணம் சென்னை கோயம்பேடு சந்தையை பராமரிக்கும் பொறுப்பில் இருக்கும் சிஎம்டிஏ தான் காரணம் என்கிறார்கள். சென்னையில் கொரோனா ஹாட் ஸ்பாட்டாகவும், கொரோனா கிளஸ்டராகவும் மாறும் வாய்ப்பு இருந்த கோயம்பேடு சந்தை விவகாரத்தில் சென்னை சிஎம்டிஏ மிக மிக அலட்சியமாக நடந்து கொண்டது அப்பட்டமாகியுள்ளது. ஏனென்றால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் வந்து இறங்கும். இதன் மூலம் சென்னை கோயம்பேடு சந்தை அனைத்து மாவட்டங்களுடனும் நேரடி தொடர்பு கொண்டது.

அதோடு மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மட்டும் அல்லாமல் மராட்டியம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு காய்கறி லாரிகள், வெங்காய லாரிகள், பழ லாரிகள் வருவது வழக்கம். இப்படி பார்க்கையில் வெளி மாநிலம் அல்லது வெளி மாவட்டத்தில் இருந்து ஒரே ஒரு கொரோனா நோயாளி இங்கு வந்து ஒரே ஒரு தும்மல் போட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும்.

ஏனென்றால் சென்னை மட்டும் அல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என அருகாமையில் உள்ள மாவட்டங்களுக்கும் இங்கிருந்து தான் காய்கறிகள் செல்கின்றன.மேலும் மக்களும் நேரடியாக கோயம்பேடு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்வது உண்டு. எனவே சென்னையில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்றவற்றுடன் மிக மிக ரிஸ்க் உள்ள பகுதியாக கோயம்பேடு இருந்துள்ளது.

இது தெரிந்து தான் கோயம்பேட்டிற்கு பொதுமக்கள் நேரடியாக வர தடை விதிக்கப்பட்டது. அதே போல் வியாபாரிகள் நேரடியாக இங்கு வந்து காய்கள், பழங்கள் வாங்கிச் சென்று வீதிகளில் விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்தது. உண்மையில் இந்த நடவடிக்கை பாரட்டக்கூடியது தான். ஏனென்றால் மக்களை நேரடியாக வரவிடாமல் தடுத்தது மூலம் கூட்டம் கூடுவதை தவிர்க்க மாநகராட்சி சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது.  

ஆனால் மக்களை நேரடியாக வர விடாமல் கோயம்பேட்டிற்கு வரும் வியாபாரிகளை பிரித்து ஒவ்வொரு பகுதியாக அனுப்பி வைப்பதிலும் ரிஸ்க் இருக்கிறது. கோயம்பேடு வரும் வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி அவர் தனது காய்கறிகளை தெருத் தெருவாக விற்க நேர்ந்தால் எத்தனை பேருக்கு பரவும்.

இப்போது அப்படித்தான் பரவிக் கொண்டிருக்கிறது. கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கி விற்பனை செய்த வியாபாரிகள், கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மூலமாக சென்னையில கொரோனா வேகம் எடுத்துள்ளது. இதே போல் கோயம்பேடு வந்து சென்ற பிற மாவட்ட கூலித் தொழிலாளர்களால் அந்தந்த மாவட்டங்களில் கொரோனா கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.

சரி இதை எப்படி தடுத்து இருக்கலாம்? இதில் யார் தவறு இருக்கிறது? என ஒரு கேள்வி இருக்கிறது. நிச்சயமாக மற்ற மாவட்டங்களில் எல்லாம் நெருக்கமான காய்கறி சந்தைகள் மூடப்பட்டன. அனைத்து சந்தைகளும் மக்கள் அதிகம் கூட வாய்ப்பு இருக்கும் அதே சமயம் சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில் மைதானங்கள், பேருந்து நிலையங்களில் காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டன.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் இந்த விஷயத்தில் தீவிரமாக இறங்கினர். இதனால் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் சென்ற மக்களால் கொரோனா பரவவவில்லை. ஆனால் சென்னையில் தான் காய்கறி சந்தை மூலம் கொரோனாவை வாரி வழங்கியுள்ளனர். பிற மாவட்டங்களில் எடுத்த முடிவைப் போல் அதாவது தற்போது திருமழிசையில் காய்கறி மார்க்கெட்டை அமைத்து வருகின்றனர்.

கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்பது போல், கோயம்பேடு சந்தையை முதலிலேயே திருமழிசைக்கு மாற்றி இருந்தால் தமிழகம் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு ஒரு மாநிலமாக இருந்திருக்கும். ஆனால் இப்படி கோயம்பேடு சந்தையை மாற்றும் முடிவை துணிச்சலாக எடுக்காத சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையின் நிர்வாகத்தை கவனித்து வரும் சிஎம்டிஏ மற்றும் அதனை தனது துறையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தான் என்று  குற்றஞ்சாட்டப்படுகிறது.

சிஎம்டிஏவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் முதலிலேயே கோயம்பேடு சந்தையை மாற்றும் முடிவில் உறுதியாக இருந்து அதனை செயல்படுத்தியிருந்தால் நோய்த் தொற்று இவ்வளவு அதிகமாகியிருக்காது. மாறாக வியாபாரிகளின் மிரட்டல்களுக்கு பணிந்து கோயம்பேடு சந்தையை தொடர்ந்து அங்கேயே செயல்பட வைத்தது தான் இத்தனைக்கும் காரணம் என்கிறார்கள்.

கோயம்பேடு சந்தை கொரோனா கிளஸ்டர் மட்டும் இல்லை என்றால் இந்த நோய்க்கு எதிரான போராட்டத்தில் தமிழகம் வென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத் திறன் நாடு முழுவதும் பேசப்பட்டிருக்கும். ஆனால் ஒருவர் செய்த தவறால்?