ராசிபுரம் விவசாயக் கூலி டூ பாஜக மாநில தலைவர்! யார் இந்த முருகன்? உயர் பதவி தேடி வந்தது எப்படி?

ராசிபுரத்தில் விவசாயக் கூலியாக ஒரு காலத்தில் வேலை பார்த்த முருகன் தற்போது நாட்டையே ஆளும் பாஜகவின் தமிழ் மாநில தலைவராகியுள்ளார்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது குடும்பமே விவசாய கூலியாக இருந்தவர்கள். சிறு வயதில் முருகனும் விவசாய கூலி வேலைகளுக்கு சென்று வந்தவர். பின்னர் படித்து வழக்கறிஞராகி தனது குடும்பத்தின் முதல் பட்டதாரி என்கிற பெருமையை பெற்றதுடன் உயர்நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞராகவும் திகழ்ந்து வந்தார்.

மாணவர் பருவம் முதலே முருகனுக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கங்களில் ஆர்வம் உண்டு. அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் பாஜகவின் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். பாஜகவின் எஸ்சி எஸ்டி பிரிவுக்கு தேசியச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

துடிப்புமிக்க வழக்கறிஞரான முருகன் கடந்த 2011ம் ஆண்டு ராசிபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதன் பிறகு பாஜக மேலிடத்தில் உள்ளவர்களுடனான தொடர்புகள் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய உறுப்பினராக தேர்வானார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்த பதவிக்காலம் இன்னும் இருக்கும் நிலையிலேயே பாஜக தலைவராகியுள்ளார். இதனால் தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் பதவியில் இருந்து விலகி முருகன் பாஜக தமிழக தலைவர் பதவியை ஏற்க உள்ளார். பாஜகவின் எஸ்சி எஸ்டி பிரிவு தேசியச் செயலாளராக இருந்த போது அக்கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் இவர் தொடர்பில் இருந்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முருகன் சரளமாக பேசக் கூடியவர். இந்தி ஓரளவுக்கு இவருக்கு தெரியும் என்று சொல்கிறார்கள். மேலும் தமிழக பாஜகவிற்கு ஒரு தலித்தை தலைவராக்க வேண்டும் என்று அமித் ஷா கடந்த 3 ஆண்டுகளாகவே யோசித்து வந்தார். அதனை செயல்வடிமாக்கியுள்ளார் ஜேபி நட்டா என்கிறார்கள்.