காலையில் கைது! ஒரு மணி நேரத்தில் ரிலீஸ்! மிரளும் பெண் பத்திரிகையாளர்கள்! யார் இந்த கிஷோர் கே சுவாமி?

பெண் பத்திரிகையாளர் ஒருவரை ஆபாசமாகவும் அறுவெறுப்பாகவும் பேசியதாக கைது செய்யப்பட்ட கிஷோர் கே சுவாமி உடடினயாக ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.


பேஸ்புக்கில் அரசியல் பதிவுகள் பிரபலமாக ஆரம்பமான சமயத்தில் தான் இந்த கிஷோர் கே சுவாமி அனைவராலும் அறியப்பட்ட ஒரு நபர் ஆகிறார். பேஸ்புக் பிரபலம் என்று கூறப்படும் அளவிற்கு இவருக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம். மேலும் பேஸ்புக்கில் பிரபலமாக இருக்க கூடிய அனைவருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

அதிமுகவின் தீவிர விசுவாசியாக அப்போது அறியப்பட்டவர். இதற்காக திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் தொடங்கி அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஏன் வட்டச் செயலாளர்கள் வரை அனைவரையும் மிகக் கடுமையாக விமர்சிப்பார். திமுக ஆட்சியில் இருந்த போதே இதனை கிஷோர் செய்து வந்தார்.

ஆங்கிலம், தமிழ் என இரண்டிலும் இவரது கருத்துகளை படிக்க பெரிய பட்டாளமே இருந்தது. எதையும் ஆனித்தனமாகவும் அதே சமயம் ஆதாரத்துடனும் துவக்கத்தில் இவர் பதிவிட்டு வந்தார். இதனால் ஏற்பட்ட நம்பகத்தன்மை கிஷோரை பேஸ்புக்கில் பிரபலமாக்கியது. மேலும் தலித்துகளுக்கு எதிராக மிகவும் வன்மத்துடன் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

இதனால் விசிகவினருக்கு துவக்கத்தில் மிகப்பெரிய எதிரியாக கிஷோர் மாறினார். அப்போது கவின் மலர் எனும் பெண் பத்திரிகையாளருடன் கிஷோருக்கு தகராறு ஏற்பட்டது. கவின் மலர் தீவிர தலித் ஆதரவாளர். விசிகவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். இதனால் சில விஷயங்களை கிஷோர் காரசாரமாக வெளியிட பேஸ்புக்கில் இவர்களுக்கு இடையே மோதல் மூண்டது.


அப்போது முதல் கவின் மலருக்கு ஆதரவாக பெண் பத்திரிகையாளர்கள் ஒன்று சேர்ந்தனர். ஆனால் புகார் கொடுத்தும் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பேஸ்புக்கில் கிஷோர் மேலும் பிரபலமானார். அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள், பாஜக ஆதரவாளர்கள், தலித் இயக்க எதிர்ப்பாளர்கள் கிஷோரை கொண்டாடினர்.

சமூக வலைதளங்கள் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய காலகட்டம் என்பதால் அதில் பிரபலமாக இருந்த கிஷோருக்கு அரசியல் தொடர்புகள் உருவானது. மேலும் போலீஸ், அதிகாரிகளின் காண்டாக்ட் கிடைத்தது. இதன் மூலமாக மேலும் சமூக வலைதளங்களில் கிஷோர் மிகவும் ஆக்டிவ் ஆனார்.

ஒரு கட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் தனிப்பட்ட சோசியல் மீடியா ஹேண்டிலராக கிஷோர் நியமிக்கப்பட்டார். ஆனால் ஒரே வாரத்தில் கிஷோரை அவர் விரட்டி அடித்தார். இதனால் ஈ.விகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். ஸ்டாலினை கடுமையாக எதிர்த்தாலும் கனிமொழிக்கு ஆதரவாக கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா தரப்பிற்கு சமூக வலைதளங்களில் தங்கள் தரப்பை பேச ஆள் தேவைப்பட்டது. அப்போது கிஷோர் சசிகலா தரப்புடன் நெருக்கமானார். மேலும் அவர் சிறை சென்ற பிறகு தினகரன் ஐடி டீமில் முக்கிய நபரானார். ஆனால் அங்கும் அவரால் நீடிக்க முடியவில்லை.

ஆனாலும் கூட தினகரனை தொடர்ந்து ஆதரித்து எழுதி வந்தார். நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் நிலைக்கு கிஷோர் தள்ளப்பட்டார். அதோடு எடப்பாடி பழனிசாமியின் மகனுடன் இவருக்கு நெருக்கமான தொடர்பு என்று ஒரு பேச்சு அடிபடுவதுண்டு. இந்த நிலையில் தான் பெண் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் என்பவர் கொடுத்த புகாரில் இன்று காலை திடீரென கிஷோர் கைது செய்யப்பட்டார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பெண் பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிஷோருக்கு எதிராக ஒரு புகார் அளித்தனர். அதில் தங்களை மிகவும் ஆபாசமாக கிஷோர் பேசுவதாகவும் அவதூறு பரப்புவதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இந்த நிலையில் கவிதா முரளிதரன் எனும் பெண் பத்திரிகையாளரோடு கிஷோருக்கு மோதல் ஏற்பட்டது. அப்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுதிய பதிவகள் தான் அவருக்கு பிரச்சனையாகிவிட்டது. மிகவும் ஆபாசமாகவும் அறுவெறுக்கத்தக்க வகையிலும் கவிதாவை கிஷோர் விமர்சித்திருந்தார்.

இந்த விமர்சனம் கிஷோரின் ஆதரவாளர்களையே முகம் சுழிக்க வைத்தது. இதனால் அவற்றை அவர் டெலிட் செய்தார். ஆனால் கவிதா, ரெகவரி சாஃப்ட்வேர் மூலமாக அவற்றை தோண்டி எடுத்து புகார் அளித்தார். இதனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் போலீசார் கிஷோரை இன்று காலை கைது செய்தனர்.

தகவல் அறிந்து ஒரு வழக்கறிஞர் டீம் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ் அலுவலகம் சென்றது. மேலும் மேலிடத்தில் இருந்தும் சில குறிப்புகள் போலீசுக்கு கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து மிகவும் சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிந்து போலீசார், கிஷோரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிபதியும் பிணையில் விடுவித்தார்.


பொதுவாக பெண் பத்திரிகையாளர்கள் புகார் என்றால் உடனடியாகவும் கடுமையாகவும் வழக்கம் கொண்ட போலீசார் கிஷோர் கே சுவாமி விவகாரத்தில் மட்டும் அடக்கி வாசிப்பதற்கு காரணம் அவருடைய மேலிடத் தொடர்புகள் தான் என்கிறார்கள். அதே சமயம் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை கிஷோர் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்தது தனது பிழைப்பை ஓட்டி வருவதாகவும் அவரை ஒரு பொருட்டாக யாரும் மதிப்பதில்லை என்றும் பேசிக் கொள்கிறார்கள்.