மோடி - அமித் ஷாவிற்கு பிறகு பாஜகவில் சக்தி வாய்ந்தவர்..! யார் இந்த ஜே.பி நட்டா?

பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகியுள்ள ஜே.பி நட்டா ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவரணியில் இருந்து தனது பொது வாழ்வை தொடங்கி தற்போது உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் உச்சபட்ச பொறுப்புக்கு வந்துள்ளார்.


இமாச்சல் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் ஜே.பி நட்டா. 1960ம் ஆண்டு பிறந்த இவர், மாணவர் பருவம் தொட்டே ஆர்எஸ்எஸ் சிந்தனை கொண்டவர். பாட்னாவில் கல்லூரி படிப்பை முடித்த போது பாஜக மீது இவரது ஆர்வம் திரும்பியது. தனது சொந்த மாநிலமான இமாச்சல் திரும்பி எல்எல்பி படித்துக் கொண்டிருந்த போது அக்கட்சியின் தீவிர உறுப்பினர் ஆனார்.

1990ம் ஆண்டு திருமணம் செய்யும் வரை தேர்தல் அரசியலில் இருந்து நட்டா ஒதுங்கி இருந்தார். முதல் முறையாக 1993ம் ஆண்டு இமாச்சலில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வானார். 1994ம் ஆண்டு இமாச்சல் சட்டப்பேரவையின் பாஜக தலைவராக உயர்ந்த நட்டா, 1998ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வென்று அமைச்சராக பொறுப்பேற்றார்.

2007ம் ஆண்டு பிரேம்குமார் துமல் தலைமையில் அமைந்த இமாச்சல் அமைச்சரவையிலும் நட்டாவிற்கு முக்கிய பதவி வழங்கப்பட்டது. ஆனால் 2012ம் ஆண்டு தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. ஆனால் பாஜக சார்பில் ராஜ்யசபா எம்பி ஆனார். இந்த கால கட்டத்தில் தான் மோடி, அமித் ஷா பழக்கம் நட்டாவிற்கு கிடைக்கிறது.

இரண்டு முறை இமாச்சலில் அமைச்சராக இருந்த போதும் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காதவர். மேலும் ஆர்எஸ்எஸ் தீவிர சிந்தனையாளர் போன்றவை நட்டா மீதான அபிமானத்தை மோடி - ஷாவுக்கு அதிகப்படுத்துகிறது. இதற்கிடையே மோடி தனது முதல் அமைச்சரவையில் நட்டாவை சுகதாரத்துறை அமைச்சராக நியமித்தார்.

ஆர்எஸ்எஸ் நெருக்குதலால் நட்டாவிற்கு இந்த பதவி கிடைத்ததாக சொல்வார்கள். ஆனால் உண்மையில் நட்டா மத்திய அமைச்சரானதன் பின்னணியில் ஷா இருந்தது தான் உண்மை. இதற்கிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது உத்தரபிரதேச மாநில பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்ப்டடார் நட்டா.

மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் மாயாவதி - அகிலேஷ் கூட்டணியை மீறி 61 இடங்களில் பாஜக வெல்ல நட்டாவின் உழைப்பு உதவியது. இதனைத் தொடர்ந்தே பாஜகவின் செயல் தலைவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார் நட்டா. அவரது பணி மோடி மற்றும் ஷாவிற்கு திருப்தியை ஏற்படுத்தியதால் தற்போது தேசியத் தலைவர் ஆகியுள்ளார். இதன் மூலம் மோடி, அமித் ஷாவிற்கு பிறகு சக்தி வாய்ந்த தலைவராக நட்டா உருவெடுத்துள்ளார்.