மதுபான ஆலையில் பயங்கர தீ! 45 ஆயிரம் பேரல் விஸ்கிக்கு நேர்ந்த கதி? அதிர்ச்சியில் குடிமகன்கள்!

நியூயார்க்: அமெரிக்காவில் 45,000 பீப்பாய்களில் இருந்த விஸ்கி தீப்பற்றி எரிந்து வீணான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் கென்டகி ஆற்றின் அருகே உள்ள ஜிம் பீம் சரக்கு குடோனில் போர்பன் எனப்படும் விஸ்கி, ஹோஸ் வாட்டர், பேரல் அடிமண்டு உள்ளிட்ட பலவற்றை ஒன்று சேர்த்து, பீப்பாய்களில் அடைத்து வைத்திருந்தனர். இந்நிலையில், அங்கு எதிர்பாராவிதமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில், அனைத்து பீப்பாய்களும் தீப்பற்றி எரிந்து வருகின்றன.

புதன்கிழமை இரவு முதல் இந்த தீ விபத்து நிகழ்ந்து வருகிறது. தீப்பற்றி எரியும் பீப்பாய்கள் அருகில் ஓடும் கென்டகி ஆற்றில் விழுவதால், அவற்றில் உள்ள கழிவுகள் அனைத்தும் தண்ணீரை மாசுபடுத்த தொடங்கியுள்ளன. ஆற்றில் உள்ள நீர்வாழ் உயிரினங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதையடுத்து, உரிய பாதுகாப்பான முறைகளுடன் இந்த தீ விபத்தை தடுத்து, கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க வரலாற்றில் இது சற்று வித்தியாசமான தீ விபத்து என, தீயணைப்புத் துறையினர் குறிப்பிடுகின்றனர். எனினும், இந்த விவகாரம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.