அம்மனுக்கு எந்த நிறத்தில் புடவை சாற்றினால் என்ன பலன் – தெரிந்து கொள்ளுங்க!

ஒரு மனிதன் சந்தோஷமாகவே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, அவனது வாழ்க்கையை முடித்து விட முடியாது. எவ்வளவுதான் செல்வச் செழிப்பினை பெற்றிருந்தாலும் அவர்களுக்கும் கஷ்ட காலம் என்பது ஒரு கட்டத்தில் வரும். அந்த சமயம் அவர்கள் கடவுளை நினைத்து வேண்டிக் கொள்வதே பிரார்த்தனையாக கருதப்படுகிறது.


மொட்டை அடிப்பது, அடிப் பிரதக்ஷ்ணம் செய்வது, அங்கப்பிரதக்ஷ்ம் செய்வது, கடவுளுக்கு அபிஷேகம் செய்வது, நாக்கில் அலகு குத்திக் கொள்வது, இப்படியாக நாம் கடவுளுக்கு செய்யும் பிரார்த்தனைகளை பட்டியலிட்டு கூறிக்கொண்டே போகலாம்.

சிலர் தன் பிரார்த்தனை நிறைவேறினால் அம்மனுக்கு புடவை சாத்துவதாக வேண்டிக் கொள்வார்கள். பலவிதமான வேண்டுதல்களை வைத்து இந்த பிரார்த்தனை செய்யப்படுகிறது. தன் குழந்தைக்கு நன்றாக பேச்சு வரவேண்டும் என்பதற்காகவும், ஆரோக்கியம் குறையாமல் இருக்கவும், திருமணத் தடை நீங்கவும், வீடு கட்டவும், கடன் தொல்லை நீங்கவும், இப்படி பலவகையான பிரார்த்தனைகளுக்கு தீர்வுகாண அம்மனுக்கு புடவை அல்லது ஆபரணங்களை சாத்துவதாக வேண்டிக்கொள்வோம். ஆனால், சிலருக்கு என்னென்ன நிறத்தில் அம்மனுக்கு புடவை சாத்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது தெரியாது.

நம் எதிரிகளிடம் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளவும், கண்திருஷ்டியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், சிவப்பு நிறப் புடவையை அம்மனுக்கு சாத்தலாம். சுப காரியங்கள் நம் வீட்டில் நடைபெற வேண்டும் என்று வேண்டுதல்கள் உள்ளவர்கள் மஞ்சள் நிற புடவையை சாத்தலாம். நம் பிள்ளைகள் நன்றாக கல்வி பயில வேண்டும் என்பதற்காகவும், வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், பச்சை நிற புடவையை சாத்தலாம்.

நமக்கு கிடைத்த வேலையை தக்க வைத்துக் கொள்ளவும், அல்லது நாம் செய்யும் வேலையில் முன்னேற்றமடைந்து உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என்றால் ஆரஞ்சு அல்லது வெளிர் சிகப்பு நிற புடவையை சாத்தலாம். நம் குடும்பம் ஒற்றுமையாக இருக்கவும், நம் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் ஒற்றுமை மேம்படவும், நம் வீட்டில் அன்பும் சந்தோஷமும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும், சந்தனம் அல்லது எலுமிச்சை நிற புடவையை அம்மனுக்கு சாத்தலாம்.

நம் வீட்டில் செல்வம் பெருகவும், நம் வீட்டிற்கு வந்த செல்வம் நம்மிடத்தில் நிலைத்து இருக்கவும், சகல சௌபாக்கியங்களையும் பெற்று சிறப்பாக வாழ மாம்பழ நிற புடவையை அம்மனுக்கு சாத்தலாம். (ஆரஞ்சும் அல்லாமல் சிகப்பும் அல்லாமல் மஞ்சளும் அல்லாமல் இந்த மூன்று நிறமும் சேர்ந்தது போல் உள்ள ஒரு நிறத்தை தான் மாம்பழ நிறம் என்பார்கள்.) கருப்பு நிற புடவையையும், வெள்ளை நிற புடவையையும் அம்மனுக்கு சாத்த கூடாது. சந்தன நிற புடவையை சரஸ்வதிக்கு சாத்தி வழிபடலாம்.

இப்படி புடவையின் ஒவ்வொரு நிறத்திற்கு பின்பும் வெவ்வேறு பலன்கள் இருக்கின்றன. ஆகையால் நாம் புடவை சார்ந்தும் முன்பு அந்த புடவையின் நிறம் குறித்த தெளிவான பலன்களை அறிந்து புடவை சார்த்துவது நல்லது. பலர் துன்பம் வரும் வேலையில் மட்டுமே இறைவனை நினைப்பதை வழக்கமாய் வைத்துள்ளனர். அப்படி இல்லாமல் சந்தோஷத்திலும் கடவுளை நினைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்து, சந்தோஷத்தை கொடுத்த கடவுளுக்கு நன்றி கூறுவது சிறந்ததாகும்.