குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் இல்லையா? - அரசுக்கு மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்

தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் குடியுரிமைச் சட்டம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றாமல் தவிர்ப்பதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டித்துள்ளது.


இது குறித்து அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், உதயகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

” மோடிஅரசு கொண்டுவந்துள்ள சிஏஏ- என்பிஆர்- என்ஆர்சியை எதிர்த்து தமிழகத்தில் கடந்து மூன்று மாதங்களாக அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் பல வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றன. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சார்பாக இரண்டு கோடிப் பேருக்கும் மேலானவர்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பாக மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. அதில் 40 லட்சம் பேருக்கும் அதிகமானோர் பங்கேற்றார்கள். சென்னையில் பல்லாயிரம் பேர் பங்கேற்ற "குடியுரிமை பாதுகாப்பு மாநாடு" நடத்தப்பட்டது. தன்னெழுச்சியான முறையில் தமிழகத்தின் பல ஊர்களில் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் பங்கேற்றுள்ள ஷாகின்பாக்குகள் பல நாள்களாக விடாது நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தின் ஒட்டுமொத்தமான எதிர்ப்பைக் காட்டும் இந்தப் போராட்டங்களின் கோரிக்கை சிஏஏ- என்பிஆர்- என்ஆர்சியை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்பிஆரின் அமுலாக்கம் இங்கே நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அறிவிக்க வேண்டும் என்பதுதான்.

ஆனாலும் அதிமுக ஆட்சியாளர்கள் கேளாக் காதினராக உள்ளனர். இந்த விஷயத்தை சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் திரு மு.க. ஸ்டாலின் கிளப்பிய போது, அப்படி எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற இயலாது என்று அமைச்சர் உதயகுமார் பதில் அளித்திருக்கிறார். என்பிஆர் தொடர்பாக மத்திய அரசுக்கு மாநில அரசு எழுதிய கடிதத்திற்கு பதில் வரவில்லை என்றும் அவரே கூறியிருக்கிறார்.

என்பிஆர் தொடர்பாக மாநில அரசு எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு மத்திய அரசு பதில் அளிக்காத நிலையில் அதன் அமுலாக்கத்தை நிறுத்தி வைப்பதுதான் நியாயமாக இருக்கும். ஆனால் அமைச்சரோ அதற்கான அறிவிப்பை வெளியிடவோ அல்லது தீர்மானத்தை நிறைவேற்றவோ அரசு தயாராக இல்லை என்கிறார்.

இது முற்றிலும் முரணான நிலைபாடு. கேட்டால் அதனால் பயனில்லை என்கிறார். பயனில்லாமலா 13 மாநிலங்கள் அதை எதிர்த்திருக்கின்றன? தமிழகமும் எதிர்க்கும்போது அது மத்திய அரசுக்கு மேலும் அழுத்தத்தைத் தரும். 

அதுமட்டுமல்ல, என்பிஆர் செயலாக்கத்தை நிறுத்திவைப்பது மாநில உரிமைக்கு புது அர்த்தத்தை தரும். மக்களின் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் ஒரு ஏற்பாட்டை மாநிலங்களைக் கேட்காமல் கொண்டுவருவது அவற்றை அவமதிப்பதாகும் என்பதை மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.

ஆனால் அதிமுக அரசோ அதைக் கை கழுவுகிறது. இது மாநில சுயாட்சிக்கு துரோகம் இழைக்கிற, பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காத, மோடி அரசின் அநியாயங்களுக்கு அடங்கிப்போகிற போக்காகும். 

அதிமுக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது. சிஏஏ- என்பிஆர்- என்ஆர்சிக்கு எதிராக சென்னையிலும் மாவட்ட மற்றும் தாலுகா தலைநகர்களிலும் மார்ச் 17 காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணிவரை நடைபெறவிருக்கும் 24 மணிநேர தொடர் இருப்பு போராட்டத்தில் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு மாநில அரசை வழிக்குக் கொண்டுவர வேண்டும்” என்று மக்கள் ஒற்றுமை மேடையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.