இன்று சூரியகிரகணம்..! சபரிமலை ஐயப்பன், திருமலை ஏழுமலையான் கோயிலில் நடை அடைப்பு, ஏன் தெரியுமா?

சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில், சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது.


அதாவது சூரியன், சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது க்ரஷ்தம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்பார்கள்.

சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு. குறிப்பாக கிரகண நாளில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது என கிரகண சாஸ்திரம் எடுத்துரைக்கிறது. இதன்பின் அறிவியல் ரீதியான காரணமும் உண்டு. அதாவது கிரகண நேரத்தில் பூமியின் மீது அதிக ஆதிக்கம் செலுத்தும் கதிர்வீச்சுகளால் கர்ப்பத்தில் உள்ள குழந்தைகளை பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.

எனவேதான் கர்ப்பிணிகளை வெளியே விடமாட்டார்கள். கிரகண கதிர்வீச்சுகளால் பாதிக்கப்படும் குழந்தையின் உடலமைப்பில் சில மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. இந்தாண்டு சூரிய கிரகணம் டிசம்பர் மாதம் 26ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 08.08 மணி முதல் காலை 11.19 மணி வரை நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவில்: சூரிய கிரகணம் காரணமாக டிசம்பர் மாதம் 26ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை 4 மணி நேரம் அடைக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் அந்நேரத்தில் பக்தர்கள் யாரும் பம்பாவில் இருந்து சன்னிதானம் நோக்கி அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐயப்பனுக்கு வழக்கமாக நடைபெறும் நெய் அபிஷேகம் அன்றைய தினம் காலை 07.30 மணிக்கே நிறுத்தப்பட்டு கோவிலின் நடை அடைக்கப்படும். இந்நிலை காலை 11.30 மணி வரை நீடிக்கும். பின்பு கோவிலில் கிரகண தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யப்பட்டு திறக்கப்படும். அதுவரை பக்தர்கள் யாரும் கோவிலுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில்: ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலாகும். தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகின்றனர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரையாக மலையேறி நடந்து சென்று தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் சூரிய கிரகணம் நடைபெற இருப்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 25 மற்றும் டிசம்பர் 26ஆம் தேதிகளில் 13 மணி நேரம் கோவில் நடை அடைக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. சூரிய கிரகணம் முடிந்த பிறகு கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் சாமி தரிசனம் துவங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.