ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..? எடப்பாடி கேள்விக்கு டென்ஷனில் தி.மு.க.

தேர்தல் பிரசாரத்தில் படு வேகமாக இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார். கோவை ராஜவீதியில் கூடியிருந்த மக்களிடையே எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:தேர்தல் வரும் நேரத்தில் திட்டமிட்டு பொய்யான அறிக்கையை வெளியிடுவதும், மக்கள் கிராம சபை என்ற நாடகத்தை அரங்கேற்றி அப்பாவி பெண்களை அழைத்து வந்து அமர வைத்து, கட்சிகாரர்கள் எழுதி கொடுக்கின்ற கேள்விகளுக்கு திண்ணையில் அமர்ந்து பதில் சொல்வது போல் ஸ்டாலின் காட்சிபடுத்தி வருகிறார்.


இப்படி தான் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் ஊர், ஊராக சென்று மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி பொய்யான வாக்குறுதிகள் மற்றும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வெற்றி பெற்றனர். ஆனால் வெற்றி பெற்ற பிறகு சொன்ன வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றியுள்ளனரா?.

ஜெயலலிதா மறைந்தபோது தி.மு.க தலைவர் ஸ்டாலின் கட்சியையும், ஆட்சியையும் கலைக்க முயன்றார். ஆனால் நாங்கள் தொண்டர்களின் உதவியுடன் அதனை முறியடித்து ஆட்சியை தொடர்ந்து வருகிறோம். நான் முதலமைச்சராக பதவியேற்றபோது இன்னும் 1 மாதத்தில் ஆட்சி கலைந்து விடும். 6 மாதத்தில் ஆட்சி கலைந்து விடும் என கூறி வந்தார். ஆனால் நான் பொறுப்பேற்று 4 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டேன் என்பதை உங்களுக்கு நினைவு கூர விரும்புகிறேன்

இந்த கோவை மாவட்டத்திற்கு மேம்பாலம், அத்திக்கடவு அவினாசி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். ஏழைகளை காக்கவே கிராமங்கள் தோறும் மினி கிளினிக் ஆரம்பித்தோம். அவை காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் செயல்படும். இதன் மூலம் கிராம மக்கள் பயன்பெறுவார்கள்.

தமிழகத்தில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி தி.மு.க. ஆனால் அவர் ஊழலை பற்றி பேசி வருகிறார். பொய்யான குற்றச்சாட்டுகளை அறிக்கையாக கொண்டு சென்று ஆளுநரிடம் கொடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்கிறார். நான் கேட்கிறேன். நாம் இருவரும் பொதுவான ஒரு இடத்தில் விவாதம் செய்யலாம். அப்போது எந்த துறையில் எவ்வளவு ஊழல் நடந்தது என்பதை நீங்கள் எந்தவித துண்டு சீட்டும் இல்லாமல் சொல்ல வேண்டும்.

அப்படி சொல்ல முடியுமா? அப்படியென்றால் நான் உங்களுடன் விவாதிக்க தயாராக உள்ளேன். கொரோனா கால கட்டத்தில் ஏழை மக்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டனர். அவர்கள் கஷ்டத்தை போக்கவே பொங்கல் பண்டிகையின் போது ரூ.2500 வழங்கினோம். ஆனால் அதனை கூட தடுக்க தி.மு.க முயற்சித்தது என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். 

ஒவ்வொரு கூட்டத்திலும் எடப்பாடி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஸ்டாலின் நழுவுவதைக் கண்டு தி.மு.க.வினரே அதிர்ந்து நிற்கிறார்கள் என்பதுதான் லேட்டஸ்ட் ட்விஸ்ட்.