30 ஏக்கர் நிலத்தில் மாளிகை! 20 கார்கள்! 200 பாதுகாவலர்கள்! 200 பணியாளர்கள்! ஆளுநர் தமிழிசைக்கு கிடைக்கும் வசதிகள்!

தெலுங்கானா மாநில ஆளுநராகியுள்ள தமிழிசை சவுந்திரராஜன் இனி ஐதராபாத்தில் 30 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள பிரமாண்ட மாளிகையில் அடுத்த ஆறு ஆண்டுகள் வசிக்க உள்ளார்.


பொதுவாக ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்தின் முதல் குடிமகன் ஆவார். அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தின் முதல் குடிமகளாக தற்போது தமிழிசை பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். ஐதரபாத்தில் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் உள்ளது. இங்கு தான் அடுத்த ஆறு ஆண்டுகள் தமிழிசை வசிக்க உள்ளார்.

இந்த ராஜ்பவன் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மூன்று மாளிகைகள் உண்டு. இந்த மாளிகைகளில் ஒன்றில் தமிழிசை வசிக்க உள்ளார். எஞ்சிய இரண்டு மாளிகைகளும் தமிழிசையின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது தான். அங்கு அவர் தன்னுடைய உறவினர்களை மற்றும் நண்பர்களை தங்க வைத்துக் கொள்ள முடியும்.

தவிர நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட உயர் பொறுப்பில் உள்ளவர்கள் ஐதராபாத் வந்தால் இந்த மாளிகையில் தான் இருப்பார்கள். மேலும் இந்த மாளிகையில் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். தவிர 200 பணியாளர்கள் ராஜ்பவனில் உண்டு. தெலுங்கானா மாநிலத்திற்கு உட்பட்ட 9 பல்கலைக்கழகங்களுக்கு தமிழிசை தான் வேந்தர்.

அங்கு துணைவேந்தர் நியமனம், பேராசிரியர்கள் நியமனம் போன்றவை தமிழிசையின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. மேலும் அந்த பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் கொடுக்க வேண்டியதும் தமிழிசை தான். இது தவிர குடியரசு தினத்தன்று தெலுங்கானா மாநிலம் சார்பில் நடைபெறும் விழாவில் தமிழிசை தான் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்.

மேலும் தெலுங்கனாவில் முதலமைச்சர், அமைச்சர்கள் தலைமை நீதிபதி போன்றோருக்கும் தமிழிசை தான் இனி பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். தமிழகத்தில் குமரி அனந்தன் எனும் காங்கிரஸ் தலைவருக்கு பிறந்த தமிழிசை தற்போது தெலுங்கானா மாநிலத்தின் முதல் குடிமகளாகியுள்ளார்.