புதிய வேளாண் மண்டலச் சட்டத்தில் என்னென்ன இருக்கவேண்டும்? - விவசாயிகள் தரப்பில் முக்கிய கருத்து

காவிரிப் படுகைப் பகுதி மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.


அதைத் தொடர்ந்து அதற்கான சட்டத்தைக் கொண்டுவர அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அந்த சட்டத்தில் என்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இது குறித்து தெரிவித்துள்ள கருத்து: காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல், கரும்பு, வாழை, தென்னை ஆகியவை பிரதானமான பயிர்களாகும். ஏற்கனவே விவசாயத்தில் இயந்திர பயன்பாடு அதிகரித்து விவசாய தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நாற்று விடுவது முதல் அறுவடை முடிந்து வைக்கோல் வண்டியில் ஏற்றப்படும் வரை அனைத்திற்கும் இயந்திரம் என்றாகிவிட்டது. இதனால், விவசாய தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து வெளி மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் சென்று கொண்டுள்ளனர். எனவே, இந்த சட்டத்தில் நிலம் பாதுகாப்பு, பாசன உத்தரவாதம், மின்சார உத்தரவாதம், நீர் நிலைகளைப் பாதுகாப்பது, பராமரிப்பது, ஆறுகள், வாய்க்கால்களை மேம்படுத்துவது, பாசனமுறையை நவீனப்படுத்துவது இதை நூறுநாள் வேலைத்திட்டத்துடன் இணைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கவேண்டும்.

லாபகரமான விலை, கொள்முதல் உத்தரவாதம், இடுபொருட்கள் மானியம், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள், குளிர்பதன கிடங்கு, வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டு பொருட்களாக தயாரித்து ஏற்றுமதிக்கான வாய்ப்பு, இத்தகைய நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்குவது, இதன் மூலம் அம்மாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்கு வேலை உத்தரவாதம், விவசாய விளைநிலங்கள் வேறு பணிகளுக்கு மாற்றுவதை தடுப்பது, பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாப்பது போன்ற பரந்து விரிந்த தொலைநோக்கு அம்சங்களை உள்ளடக்கியதாக இச்சட்டம் இருக்கவேண்டும்.

எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கென்று தோண்டப்பட்ட கிணறுகள் மூடப்பட்டு விவசாயம் செய்ய ஏற்ற வகையில் நிலம் திருத்தம் செய்து விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். குழாய்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். எண்ணெய், எரிவாயு பணிக்கென நிறுத்தப்பட்டுள்ள இயந்திரங்கள் வெளியேற்றப்பட வேண்டும்.

ஏற்கனவே ரசாயன மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எதிர்காலத்திலும் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் காவிரிப்படுகையில் செயல்படுத்துவதைத் தடுக்கும் வகையில் சட்டப்பாதுகாப்பு இருக்க வேண்டும். தங்களது நிலத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாத்து கொள்வதற்காகவும், தமிழகத்தின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், 28 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்கவும் தான் மக்கள் போராடினர்.

எனவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய, பிரச்சாரம் செய்த ஆயிரக்கணக்கானோர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும். முதலமைச்சர் அறிவிப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட முன்னோடியாக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இந்த அம்சங்களை உள்ளடக்கிய சட்டத்தினை இயற்றுவதன் மூலம் தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைப் பாதுகாக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் துணைநிற்பார்கள் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.