மகாளய பட்சம்! 14 நாட்களில் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்னவெல்லாம் செய்யக்கூடாது?

இந்த மாதம் 14ஆம் தேதி மகாளய பட்சம் தொடங்குகிறது. செப்டம்பர் 28 ஆம் தேதி மகாளய அமாவாசை


எல்லா மாதத்திலும் வரும் அமாவாசையை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிகவும் உயர்ந்தது. மற்ற மாதங்களில் அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய வேண்டும். நம் முன்னோர்கள் மறைந்த திதியன்று ஸ்ரார்த்தம் (திவசம் ) செய்வோம். 

ஆனால் மகாளயபட்ச காலத்தில் பிரதமை திதி துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒட்டு மொத்த முன்னோர்களையும் அப்போது நினைவு கூற வேண்டும். புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று புனித நீராடி நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக ப்ரார்த்தனை செய்து வர வேண்டும். அந்தணர்களுக்கு வஸ்திரதானம் ஏழைகளுக்கு அன்னதானம் படிக்க சிரமப்படும் ( பொருளாதார நிலையில் ) மாணவர்களுக்கு வித்யாதானம் இவைகளை அவரவர் சக்திக்கு தகுந்தவாறு அளிக்க வேண்டும். 

இந்த தான-தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் உங்கள் முன்னோர்கள் மிகவும் திருப்தியுடன் உங்கள் வீட்டில் இருந்து பித்ருலோகத்துக்கு கிளம்பிச் செல்வார்கள். அவர்கள் மன நிறைவுடன் வாழ்த்த, வாழ்த்த உங்கள் வாழ்க்கையில் மேம்பாடு உண்டாகும். 

மகாளய பட்சத்தில் தாய்- தந்தையருக்கு வருடா வருடம் செய்யும் சிராத்தம் நேர்ந்தால், சிராத்த நாளன்று சிராத்தம் செய்து விட்டு அதற்கு பிறகு மற்றொரு நாளில் மகாளயத்தை செய்ய வேண்டும். 

மகாளயபட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதைப் பார்ப்போம்: 

முதல் நாள் : பிரதமை திதி - பணம் சேரும் 

இரண்டாம் நாள் : துவிதியை திதி - ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும் 

மூன்றாம் நாள் : திரிதியை திதி - நினைத்தது நிறைவேறும் 

நான்காம் நாள் : சதுர்த்தி திதி - பகை விலகும் 

ஐந்தாம் நாள் : பஞ்சமி திதி - வீடு நிலம் சொத்து வாங்கும் யோகம் கூடும் 

ஆறாம் நாள் : ஷஷ்டி திதி - புகழ் கிடைக்கும் 

ஏழாம் நாள் : ஸப்தமி திதி - சிறந்த பதவி கிடைக்கும் 

எட்டாம் நாள் : அஷ்டமி திதி - அறிவு ஞானம் கிடைக்கும் 

ஒன்பதாம் நாள் : நவமி திதி - சிறந்த வாழ்க்கை துணை கிடைக்கும் 

பத்தாம் நாள் : தசமி திதி - நீண்டநாள் ஆசை நிறைவேறும் 

பதினோராம் நாள் : ஏகாதசி திதி - படிப்பு கலை வளரும் 

பனிரென்டாம் நாள் : துவாதசி திதி - தங்க ஆபரணங்கள் சேரும் 

பதிமூன்றாம் நாள் : திரயோதசி திதி - தீர்க்காயுள் ஆரோக்யம் தொழில் அபிவிருத்தி கிடைத்தல் 

பதினான்காம் நாள் : சதுர்த்தசி திதி - பாவம் நீங்கி எதிர்கால தலைமுறைக்கு நன்மை 

பதினைந்தாம் நாள் : மகாளயஅமாவாசை - மேலே சொன்ன அத்தனை பலன்களும் நம்மை வந்து சேர நம் முன்னோர்கள் ஆசி வழங்குவார்கள் 

மகாளயபட்சத்தின் போது சில விதிமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்: 

மகாளயபட்ச ( மேலே சொன்ன 15 தினங்கள் ) காலத்தில் கண்டிப்பாக வெங்காயம் சேர்க்க கூடாது 

எண்ணெய் ஸ்நானம் செய்யக்கூடாது 

முகச்சவரம் செய்யக்கூடாது 

தாம்பத்யம் ( உடலுறவு )கூடாது 

புலனடக்கம் மிக மிக அவசியம் 

மகாளயபட்சத்து ( பதினைந்து நாட்களில் ) தினங்களில் கண்டிப்பாக வெளியே சாப்பிடக் கூடாது. 

பிதுர்காரகனான சூரியனும், மாதுர்காரகனான சந்திரனும் விஷ்ணு லோகம் என்று கருதப்படும் கன்னி இராசியில் ஒன்றிணையும்போது வரும் அமாவாசையே மஹாளய அமாவாசை. பிற மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் முன்னோரை வணங்க மறந்தவர்களும், சந்தர்ப்பம் சரியாக அமையாதவர்களும் கூட இந்தப்புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்ய, பிதுர்தோஷம் முற்றிலுமாக நீங்கி புண்ணியம் அடைவர்.