இருட்டுக்கடைஅல்வா அதிபர் தற்கொலை உணர்த்துவது என்ன..? அரசு இனியாவது மக்களுக்கு நம்பிக்கை அளிக்குமா?

தனக்கு கொரோனா தொற்று பாசிடிவ் என்ற தகவல் கேள்விப்பட்டதும் அதிர்ச்சியில் தற்கொலை முடிவு எடுத்திருக்கிறார்.


இதுபோன்று கொரொனாவை நினைத்து மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இந்த நேரத்தில் அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை சுட்டிக் காட்டுகிறார், மனநல மருத்துவர் சி.ராமசுப்பிரமணியன்.

’தமிழ்நாட்டில் கொரோனா சமூகத் தொற்றாக மாறிவிட்டது. உண்மைதான். ஆனால், இறப்பு விகிதம் மிகமிக குறைவாக இருக்கிறது. சிகிச்சை பெறுவோரில் முக்கால்வாசிப் பேர் மிகமிக விரைவாகக் குணமாகி வீட்டிற்குச் சென்றுவிடுகிறார்கள்' என்ற உண்மையை அரசும், மருத்துவத் துறையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

ஒருவரை திடீரெனப் பரிசோதனை செய்து, உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று அறிவிக்கும்போது பதற்றமடையவே செய்வார். அடுத்த சில மணி நேரங்களில் அவரைப் பிடித்துக்கொண்டு போய்த் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சேர்க்கும்போதும், சுற்றிச் சுற்றிக் கவச உடையணிந்த செவிலியர்களும், டாக்டர்களும் நடமாடுகிறபோதும் அவரது பயம் மேலும் அதிகரிக்கும்.

அய்யோ நாம் பிழைப்போமா? நம்முடைய குடும்பத்தில் மற்றவர்களுக்கும் நோய் இருக்குமோ? கடன் பிரச்சினை இருக்கிறதே? வேலை போய்விடுமே என்று பயந்தால், அது அவரை மேலும் பலவீனமாக்கும். எனவே, பரிசோதனைக்கு முன்பே அவருக்கு கவுன்சிலிங் தர வேண்டியது அவசியம். அவரது குடும்பத்துக்கும் கவுன்சலிங் அளிக்க வேண்டும். குணமாகி வீடு திரும்பும் போதுகூடக் கவுன்சலிங் தேவை. அக்கம் பக்கத்தினர் உங்களைக் கண்டு விலகினால் பயப்படாதீர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள் என்று சொல்லி அனுப்ப வேண்டும்.

எல்லோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நமக்கு வரவே வராது என்று அளவுகடந்த தன்னம்பிக்கையோடு இருந்துவிட்டு, வந்துவிட்டால் ஒரேயடியாக மனமுடையத் தேவையில்லை. நோய் வரலாம். ஆனால், அதில் இருந்து நாம் நிச்சயமாக மீள்வோம் என்று தெரிவித்துள்ளார் மனநல மருத்துவர் சி.ராமசுப்பிரமணியன்.