விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் அரசுகள்! உலகமயமாக்கலில் நசுக்கப்படும் விவசாயிகளுக்கு தீர்வு என்ன?

உலகமயமாக்கலில் சிக்கி சின்னாபின்னமாகும் விவசாயம்.


விவசாய நாடு என்று‌ பள்ளிகளில் நாம் படித்த இந்தியா. மூன்று பக்கம் கடல் சூழ்ந்த தீபகற்ப நாடாகத் தான் உள்ளதே தவிர. அதன் "உயிர்நாடி விவசாயம்" மெல்ல மெல்ல அழிந்து வருகிறது என்று கூறுகிறது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். இந்தியா ஒரு விவசாய நாடு என்பது நாடறிந்த விடயம் தான் . ஒவ்வொரு நாட்டிற்கும் பாரம்பரிய தொழில் என்று ஒன்று உண்டு . 

இந்தியாவுக்கு விவசாயத்தைப் போல அந்தந்த நாட்டின் வளர்ச்சியும் அவர்களின் பாரம்பரிய தொழிலைச் சார்ந்தே இருந்தால்தான் அந்த நாடு பொருளாதாரத்தில் திடமான வளர்ச்சி அடைய முடியும் என கூறுகிறது முன்னேறிய நாடுகளின் வரலாறுகள்.

எத்தியோப்பியா. சூடான். சோமாலியா இவையெல்லாம் நிகழ்கால பஞ்ச நாடுகளாக பரிதாபமாக காட்சியளிக்கிறது. எதிர்கால பஞ்ச நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இருக்கப் போகிறது என்கிற ஆனந்த செய்தியைத் தான் கீழே நாம் படிக்க இருக்கிறோம்.

1991-ம் ஆண்டு துவங்கி 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 5 கோடி விவசாயிகள் ‘விவசாயத்தை’ கைவிட்டுள்ளதாகவும். கடந்த பதினெட்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 4 கோடி விவசாயிகள் விவசாய நிலங்களை விற்றுவிட்டு வேறு தொழிலுக்கு மாற்றமாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல். மனித வள ஆராய்ச்சி மையத்தின் (Institute of Applied Manpower research) ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் 1991 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில். விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை தேசிய அளவில் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 1981-லிருந்து 1991 வரையிலான கால கட்டத்தில் நேரடி விவசாயத்தில் ஈடுப்பட்ட இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 9.2 கோடியிலிருந்து 11 கோடியாக உயர்ந்ததாகவும்.

2000ம் ஆண்டுக்குப் பிறகு. அந்நிய முதலீடு சட்டம் அமலானது முதல். அதற்கு பிறகான காலங்களில் தான் விவசாயிகளின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கிறது அந்த அறிக்கை.. 

அதுமட்டுமின்றி. இந்த 36 வருட காலகட்டத்தில் நாளொன்றிற்கு சுமார் 3 ஆயிரம் விவசாயிகள் விவசாய தொழிலை விட்டு போக காரணமாக இருந்துள்ளது மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை நிதி ஒதுக்கீடுகள்.

வல்லரசு நாடுகளுக்கு ஈடாக பொருளாதாரத்தை உயர்த்த எடுத்த முயற்சிகளில். 5 சதவீதம் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாறியிருக்கும்.

நமக்கெல்லாம் பொருளாதாரம் என்றால். ஆட்டோமொபைல் துறை. வங்கிகள் சார்ந்த துறை. சாப்ட்வேர் கம்பெனிகள். இவைகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். உதாரண கணக்கிற்கு கூட விவசாய துறையை சேர்க்கவில்லை. இது தான் நிதர்சனம்..

இன்றைய தலைமுறையினருக்கு விவசாயம் என்றால் வயல்வெளி. கிராமங்கள் என்பதோடு முடிந்துவிடுகிறது அவர்களின் அறிவுத் தேடல். மழையை வானத்தில் இருந்து எடுங்கள். பூமியில் அல்ல என்று கூறிய நம்மாழ்வார் பற்றி நூற்றில் ஐவருக்கு தெரிந்தாலே அதிசயம் தான். இதுதான் நாம் கற்றுக் கொண்ட அடிப்படை அறிவு.

விவசாயத்தில் அழிவு என்பது கொஞ்சம் நஞ்சம் இருக்கும் இறையாண்மையையும் முற்றாக இழக்கும் நிலைக்கு நம்மை தள்ளி கொண்டு செல்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாளொன்றுக்கு சராசரியாக 80 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கிறது தேசிய குற்றப் பதிவு ஆணையம்.

ஊரக வளர்ச்சி திட்டங்களின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறைக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. விவசாயத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 90-களின் துவக்கத்தில் 13 சதவீதமாக இருந்தது. தற்போது 2018-19 பட்ஜெட்டில் சுமார் 5.2 சதவீதமாக உள்ளதை காணலாம்.

இந்தியாவின் பொருளாதார மந்தநிலையில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ள ஐ.டி துறையோ தற்போது அமெரிக்காவிலும் தள்ளாட்டத்தை காண ஆரம்பித்துள்ளது. நம் விவசாயிகளுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை அமெரிக்க விவசாயிகளுக்கு எப்போதோ ஏற்பட்டுவிட்டது.

1939 ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தை சமாளிக்க அமெரிக்க அரசு நான்கு முக்கியமான சட்டங்களைக் கொண்டுவந்தது . விவசாயிகளுக்கு நிவாரணச் சங்கம். நில நிர்வாகச் சட்டம்விலை நிர்ணைய சட்டம் .விவசாய உற்பத்தியாளர் உழவர் சந்தை சட்டம் என.இந்த சட்டங்களின் படி அனைத்து விவசாயிகளின் கடனும் ரத்து செய்யப்பட்டன. 

எல்லாத் துறைகளிலும் விலை உயர்ந்துள்ளது போல விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது , அந்த விலை ஏறவும் இறங்கவும் முடியாத படி விவசாயிகளுக்கான உழவர் சந்தை வாரந்தோறும் அமைக்கப்பட்டது. இதனால் விவசாய பொருட்களின் விலை விவசாயிகளால் நிர்ணையம் செய்யப்பட்டது. 

ஆனால் நம் நாட்டில் தமிழ்நாட்டைத் தவிர அவ்வாறு எங்கும் இதுபோன்ற திட்டங்கள் நடைமுறையில் இல்லை என்பது தான் உண்மை. அதிலும் கடந்த 8 ஆண்டுகளாக அப்போதைய ஆளுங்கட்சி கொண்டு வந்தது என்கிற காரணத்தாலேயே உழவர் சந்தை திட்டம் நாதியற்று போயுள்ளன.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது, கடன் தள்ளுபடி அறிவிப்பது, புதிய தொழில்நுட்பத்தில் விவசாயம் மேற்கொள்ள உதவுவது, விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை கூட்டுவது போன்றவை குறித்து அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட 2019-20 பட்ஜெட்டில். இதுகுறித்து எந்த அறிவிப்பையும் கூறாதது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறையின் வளர்ச்சியும் தேக்கமடைந்து விட்டது. இச்சூழலில் விவசாயத்தின் அழிவும் அதைத் தொடர்ந்து கிராமப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் ஊரகப் பகுதிகளில் இருந்து விசிறியடிக்கப்பட்டு நகரங்களில் கூலிகளாய்க் குவிந்துள்ள மக்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. 

மீண்டும் கிராமத்துக்கே சென்று விவசாயத்தை துவங்குவது சாத்தியமற்றதாகிய காரணமாக. நகர வாழ்க்கையில் பிணைந்து விட்ட கிராமவாசிகளால். நகர்ப்புறங்களின் சேரிகளிலும் நடைபாதைகளிலும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சங்க கால தமிழர்கள் வாழ்க்கையின் முக்கிய பகுதியாக வேளாண்மை இருந்துள்ள விவசாயம் வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றாக கருதப்பட்டது, எனவே அனைத்து தொழில்களைவிட விவசாயம் முதன்மை வகித்தது. உழவர்கள் சமூக நிலையில் மேல் நிலையில் இருந்தனர். மேலும் 

இந்திய  வேளாண்மை பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட விவசாய நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார போட்டிகளால், விவசாயத்தின் அழிவும். அதைத் தொடர்ந்து பஞ்சத்தையும் நோக்கி மெல்ல மெல்ல இழுத்துச் செல்கிறது இந்திய அரசாங்கம். 

விவசாயத்திற்கும் உள்நாட்டுத் தொழில்துறைக்கும் துரோகமிழைத்து நாட்டை மீண்டும் அடிமையாக்கத் துடிக்கும் காரணிகளை கலையாவிட்டால். ஒட்டுமொத்தமாக ஒரு பெரும் அழிவை இந்நாடு சந்திக்கும் என்பதில் ஐயமில்லை.

மணியன் கலியமூர்த்தி