காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு வெளியேறுவதற்கு காரணம் என்ன..?

தமிழகத்தில் ரசிகர்களால் கோயில் கட்டி கும்பிடப்பட்ட ஒரு நடிகை என்றால், அது குஷ்பு மட்டும்தான். அதனால்தானோ என்னவோ, தமிழகத்துக்கு சேவை செய்தே தீருவேன் என்று அரசியலில் தீவிரமாக குதித்தார்.


ஆரம்பத்தில் அ.தி.மு.க., அப்புறம் தி.மு.க., பின்னர் காங்கிரஸ் என்று பல்வேறு கப்பல்களில் பயணம் செய்த குஷ்பு, இப்போது பிரதமர் தலைமையிலான மோடி அரசுக்கு ஆதரவாக கிளம்பியிருக்கிறார்.

இதற்கான பேச்சுவார்த்தை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. இந்த விஷயத்தை பத்திரிகைகள் மோப்பம்பிடித்து செய்தி வெளியிட்டன. ஆனாலும், விடாப்பிடியாக மறுத்துவந்தார் குஷ்பு.

இந்த நிலையில் திடீரென ஞாயிறு இரவு விமானத்தில் கிளம்பிச்சென்று, திங்களன்று பா.ஜ.க.வில் ஐக்கியமாகிவிட்டார். அவரது கணவர் சுந்தர்.சி.யும் உடன் சென்றுள்ளார்.

பா.ஜ.கவில் சேர்வதை உறுதி செய்யும் வகையில் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அனுப்பினார். அதையடுத்து குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு வெளியேறுவதற்கு காரணம் என்னவென்று விசாரித்தோம். முழுக்க முழுக்க கே.எஸ்.அழகிரிதான் காரணம் என்று சொல்கிறாராம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சீட் எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு கிடைக்கவில்லை.

தற்போது சட்டமன்றத் தேர்தலிலும் அழகிரியின் தலைமையில் இருந்தால் சீட் கிடைக்காது என்பது தெரியவந்துள்ளது. அதனாலே கட்சி மாறும் முடிவுக்கு வந்துவிட்டார் என்கிறார்கள். அதையே அவரது கடிதத்தில், ‘கட்சியில் பெயருக்காகவோ, புகழுக்காகவோ, பணஆதாயத்திற்காகவோ நான் சேரவில்லை. கட்சியின் உண்மை நிலை மற்றும் சமூக அங்கீகாரம் ஆகியவற்றுடன் எவ்வித தொடர்பும் இல்லாத சிலரால், கட்சியின் உயர்மட்டத்தில் உள்ள சிலரால், காங்கிரசில் உண்மையாக பணியாற்ற விரும்பிய என்னை போன்றவர்கள் தள்ளிவிடப்பட்டனர். நசுக்கப்பட்டனர்.’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசும் கே.எஸ்.அழகிரி, ’’காங்கிரஸுக்கும் அவருக்கும் எந்த உறவும் கிடையாது. அவர் தாமரை இலைத் தண்ணீராகத்தான் கட்சியில் இருந்தார். அவரை ஒரு நடிகையாகத்தான் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பார்த்து ரசித்தார்களே தவிர அரசியல் தலைவராக அவரைப் பார்க்கவில்லை. காங்கிரஸ் இயக்கம் சிந்தாந்த ரீதியாக, கொள்கை ரீதியான 100 ஆண்டுகளைக் கடந்த பேரியக்கம். இதைப்போன்ற தனி மனிதர்கள் செய்கையால் ஒருபோதும் பலவீனமடையாது’’ என்று கூறியிருக்கிறார்.