பிரதோஷம் என்றால் என்ன? பிரதோஷ பூஜை செய்வதால் ஏற்படும் நன்மை என்ன தெரியுமா?

பரமேஸ்வரன் தேவர்களை மகிழ்விப்பதற்காக மாலை நேரத்தில் அதாவது பிரதோஷ வேளையில் நடனம் ஆடியதாக புராணங்களை படித்துள்ளோம்.

இந்த சம்பவம் நடந்தது ஒரு சனிக்கிழமையும் திரயோதசி திதியும் கூடிய மாலை நேரமாக இருந்ததால் சனி பிரதோஷம் மிகச் சிறந்த சிறப்பு வாய்ந்ததாகக் கொள்ளப் பட்டிருக்கிறது. பிரதோஷ காலத்தில் ஈஸ்வரன் எல்லாவற்றையும் தன்னிடம் அடக்கிக் கொள்வதால் நமக்கும் அந்தக் காலம்தான் ஏகாந்தத்தை அனுபவிக்கும் காலமாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறை என்ற இரண்டு காலங்களிலும் வருகின்ற திரியோதசி திதியில் சூரிய அஸ்தமனத்துக்கு முன் சிறிது காலம் சூரிய அஸ்தமனத்திற்கு பின் சிறிது காலமே பிரதோஷம் எனப்படும். பிரதோஷ தினத்தன்று கோயிலுக்குச் சென்று சிவனையும் நந்தியையும் தரிசிப்பது மிகவும் சிறந்தது.  

பாற்கடலைக் கடைந்த போது உண்டான ஆலகால விஷம் தேவர்களைத் துரத்தியது ,தப்பிக்க நினைத்து ஓடிய தேவர்கள் ,கயிலைக்குச் சென்று இறைவனை வலம் வர ஆலகால விஷம் எதிர்ப்புறமாக வந்து மறித்தது.தேவர்கள் பயந்து திரும்பி ,இடப்புறமாக ஓட ,விஷம் மீண்டும் எதிர்ப் பக்கம் சூழ்ந்தது.இப்படி வலமும்,இடமும் தேவர்கள் பயந்து ஓடிய நிகழ்ச்சியே 'சோம சூக்தப் பிரதட்சிணம்' என்று பெயர் பெற்றது.எனவே ,பிரதோஷ நாளில் இறைவனை வலமும்,இடமும் மாறி மாறி சுற்றி வணங்குதல் நற் பலன்களைத் தரும்.

பிரதோஷ தினத்தன்று முதலில் நந்தியெம்பெருமானை வணங்க வேண்டும். பிறகு சுவாமி சன்னதிக்கு முன் உள்ள நந்தியின் கொம்புகளுக்கிடையே கருவறையில் உள்ள சிவலிங்கத்தைக் கொண்டு வணங்க வேண்டும். அதன் பிறகு அப்பிரதட்சணமாக சண்டிகேஸ்வரரை தரிசிக்க வேண்டும். பிறகு பிரதட்சிணமாக திரும்பி முன்போல் சிவன் நந்தியை தரிசித்து விட்டு எப்பொழுதும் போல் கோவிலை வலமாகச் சுற்றி சுவாமியின் அபிஷேக நீர் தொட்டி வரை வர வேண்டும். அந்தத் தொட்டியை தாண்டாமல் அப்படியே திரும்பி வந்து நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கு நடுவாக நின்று சிவனை தரிசிக்க வேண்டும். இதை போல் 3 பிரதட்சனம் செய்தால் அனேக அசுவமேத யாகங்கள் செய்த பலன் கிடைக்கும்.

கோயிலுக்கு செல்ல இயலாதவர்கள் அவரவர் வீட்டில் இருந்தபடியே பிரதோஷ பூஜை செய்யலாம். சுத்தப்படுத்தி மனைப் பலகையைப் போட்டு அதில் கோலமிட்டு இருக்க வீட்டில் இருக்கும் சிவலிங்கம் வைத்து சந்தனம் குங்குமம் இட்டு மாலை சாற்றி வைக்கவேண்டும்.

முதலில் விநாயகரை மனமுருக பிரார்த்தனை செய்து கொள்ளவும். கையில் பூ சிறிது எடுத்துக் கொண்டு சர்வேஸ்வரா எனது முற்பிறவி மட்டும் இப்பிறவியில் மனம் மற்றும் வாக்கினால் ஏற்பட்ட கர்மங்களையும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல பாவங்களையும் மன்னித்து எனக்கு மோட்சம் கிடைத்து அருள்செய்ய வேண்டி நான் இந்த பிரதோஷ காலத்தில் செய்யும் பூஜையை ஏற்றுக் கொண்டு அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்று சொல்லி சுவாமி படத்தின் முன் சமர்ப்பிக்கவும்.

பின் விருப்பமுள்ளவர்கள் 108 சிவ அஷ்டோத்திரம் அல்லது போற்றி சொல்லி அர்ச்சனை செய்யலாம். முடியவில்லை எனில் சுலபமாக 11 நாமாக்களை சொல்லி அர்ச்சனை செய்யலாம்.

ஓம் சிவாய நமக

ஓம் மித்ராய நமஹ

ஓம் ருத்ராய நமஹ

ஓம் பசுபதயே நம

ஓம் நீலகண்டாய நமக

ஓம் அகத்தீஸ்வராய நமஹ

ஓம் சர்வாய நமஹ

ஓம் ஈஸ்வராய நமக

ஓம் விருஷப த்வஜாய நமக

ஓம் சங்கராய நமஹ

ஓம் மஹாதேவாய நம

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி சமர்ப்பயாமி என்று சொல்லி அட்சதைகளைப் போடவும். பிறகு தூபம் தீபம் காட்டி நிவேதனம் செய்து கற்பூர ஆரத்தி காட்டி பூர்த்தி செய்யவும்.

பிரதோஷ வழிபாட்டை பக்தியுடனும் நம்பிக்கையுடனும் செய்பவர்களுக்கு நினைத்த காரியம் வெற்றி ஆகும்

More Recent News