சித் + அம்பரம் = சிதம்பரம். இந்த உலகம் சிவனும் சக்தியும் இணைந்ததே.
ஓ... இதுதான் சிதம்பர ரகசியமா? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க!
உலகில் நாம் பார்க்கும் தம்பதியரைப் போல் அல்லாமல், சிவ சக்தியர் ஞானமும் அதை நடைமுறைப்படுத்தும் காரியமாகவும் விளங்குகிறார்கள். சைவ சித்தாந்தத்தின் ப்ரகரண கிரந்தமாக விளங்கக்கூடிய `தத்வ ப்ரகாசிகா' எனும் நூல், ‘சித்கன:’ என்று சிறப்பாக அப்பெரும் பரம்பொருளை, ரகசியத்தை உணர்த்தி உள்ளது.
இந்த உலகில் நாம் எந்தக் காரியத்தைச் செய்ய நினைத்தாலும், அதைப் பற்றிய அறிவும், அதைச் செயல்படுத்தக்கூடிய சாமர்த்தியமும் மிக அவசியம். அதேபோல், இந்த மாபெரும் பிரபஞ்சத்தைப் படைத்து, காப்பதற்கு மிகப் பெரிய சக்தி - பரம்பொருள் தேவைப்படுகிறது. காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை. சில இடங்களில் `இன்னதுதான் காரணம்' என்று நேரடியாக நமக்குத் தெரிகிறது. சில இடங்களில் நம் அனுமானமே நம்மை வழிநடத்துகிறது. கடவுளை நாம் அனுமானத்தினால்தான் அறிய முடியும். இந்தப் பிரபஞ்சத்தின் காரணமே சிதம்பரம். இதுவே ‘சிதம்பர ரகசியம்’.
சிதம்பர ரகசியத்தை புறக்கண்னால் காணாமல் ஞானக்கண்ணால் கண்டுணர்வதே இந்த ரகசியம் உணர்வதன் அருளாகும். இதற்கு இறையருள் தேவை. பரம ரகசியமாகவும், பராபர ரகசியமாகவும் விளங்கும் சிதம்பர ரகசியம் சிவ ரகசியமாகும்.
உயிர்களால் உணர முடியாததும், புலன்களால் அறிய முடியாததுமே சிதம்பர ரகசியம்.. சித்தத்தை வென்ற சித்தர்களுக்கே இது வசப்படும்
தில்லையம்பல நடராசன் சந்நதிக்கு அருகில் சிதம்பர ரகசிய பீடம் அமைந்துள்ளது. சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. பொன்னாலான வில்வ மாலை சாத்தப்பட்டு சிதம்பர ரகசிய காட்சி பக்தர்கள் பார்வைக்கு காண்பிக்கப்படுகிறது. இதனை திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும் கூறுவார்கள்.
இது 'திரஸ்க்ரிணீ' என்கிற நீல வஸ்திரத் திரையால் மூடப்பட்டு இருக்கும். திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். பரிபூரணமான வெட்டவெளியே இதன் ரகசியமாகும். இந்த வாயிலில் உள்ள திரை அகற்றுப்பட்டு ஆரத்தி காட்டப் படும்போது, அங்கு சிலையோ வேறு காட்சிகளோ தென்படாது. தங்கத்தால் செய்யப்பட்ட 'வில்வ தளமாலை' ஒன்று தொங்கும் காட்சிமட்டுமே தெரியும். இதனுள்ளே வேறு திருவுருவம் ஏதும் தோன்றாது.
மூர்த்தி ஒன்றும் இல்லாமலேயே வில்வ தளம் தொங்குவதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் முடிவும் முதலும் இல்லாது இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. வெட்ட வெளியில் அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். அந்த ரகசியத்தின் அடிப்படையில் தான் பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகக் அமைந்தது எனலாம். சிதம்பர ரகசியம் : சித்+அம்பரம் = சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்- வெட்டவெளி. 'மனிதனே !உன்னிடம் ஏதும் இல்லை’ என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.
இந்த சிதம்பர ரகசியத்தை வேண்டிக்கொண்டு, திடசங்கல்பத்துடன் ஒருவன் தரிசித்தால், நினைத்தபடி நினைத்த பலன் கிடைக்கும். ஆனால் எவ்வித பலனையும் சிந்திக்காமல் ‘நிஷ்சங்கல்பமாகத் தரிசித்தால் ஜென்ம விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இது மனக் கண்ணால் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். அதாவது, திரை என்பது மாயை. திரை விலகினால் ஒளி தெரியும். அதேபோல், நம் மனதில் உள்ள மாயை விலகினால் ஞானம் பிறக்கும்‘ என்பதே விளக்கம். இந்த அருவ நிலைதான் இங்கு மூலஸ்தானம். அருவ வடிவமாக, இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கிறான் என்பதை உணர்த்துவதே இந்த வெட்டவெளி ஆகும். அதனால் சிதம்பரம் ஆகாயத் தலம் என்றும் பூசிக்கப்படுகிறது.