மனிதனுக்கு தலையெழுத்து என்பது உண்மையில் இருக்கிறதா – ஆன்மீக விளக்கம்!

மனிதர்களின் வாழ்கையில் ஏதாவது எதிர்பாராத சம்பவங்கள் நடந்துவிட்டாலோ, தன் புரிதலுக்கு மீறிய விஷயங்கள் நடந்துவிட்டாலோ, தவறான கணவன் மனைவி அமைந்துவிட்டாலோ, பிள்ளைகள் தவறான செயல்களை செய்துவிட்டாலோ, பிடிக்காத விஷயம் ஏதாவது நடந்துவிட்டாலோ அல்லது குணப்படுத்த தெரியாத நோய்கள் உருவாகிவிட்டாலோ, அதை தலைவிதி என்று சொல்லி ஏற்றுக்கொள்ளும் வழக்கம் மக்களிடத்தில் இருக்கிறது.


தலைநகரம், தலைமகன், தலைமை, தலைவன் போன்ற வார்த்தைகளில் வரும் தலை என்ற சொல், முதல், முதன்மை என்ற அர்த்தத்தைத்தான் குறிக்கிறது. அதைப்போல் தலையெழுத்து என்பதையும் முதன்மையான எழுத்து என்பதைத்தான் குறிக்கிறது. தலையெழுத்து என்பது மனிதன் பிறக்கும் முன் எழுதப்பட்ட முதல் எழுத்து அல்லது முதல் விதி என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

ஒரு ஜீவனின் தலையெழுத்து என்பது, அவனது ஆசைகள், இயற்கையின் செயல்பாடு, அவனது கடந்த காலச் செயல்கள் (கர்மம்), கர்ம வினைக்கான காலம் ஆகியவை மட்டுமின்றி இதர சில காரணங்களுடன் கூடி பின்னிப் பினையப்பட்ட சிக்கலான முடிச்சு. இக்காரணங்களின் விளைவுகளைக் கூட்டிக் கழித்த பின் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டிய ஒட்டு மொத்த பலன்களே தலையெழுத்து என்று அறியப்படுகிறது.

ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் இந்த தலையெழுத்து என்பதை ஒருவரின் ஜாதகத்தில் உள்ள லக்ன பாவகம் என்பது நிர்ணயம் செய்யும். லக்னம் என்று அழைக்கப்படும் முதல் பாவகமே ஒரு மனிதனின் விதியை நிர்ணயம் செய்கிறது. மனித உடற்கூறு இயலில் தலை என்பதைக் குறிப்பதும் இந்த லக்னம் ஆகிய ஒன்றாம் பாவகமே ஆகும். அதனை ‘ல’ என்ற எழுத்தினால் குறித்திருப்பார்கள். ‘ல’ என்ற எழுத்தானது சுழித்து எழுதப்படுவதால் இதனையே சுழி என்றும் குறிப்பிடுவார்கள்.

பேச்சுவாக்கில் அவன் சுழி சரியில்லை என்று சொல்வார்களே, அந்தச் சுழி என்பதும் இந்த லக்னத்தையே குறிக்கும். சுழி சரியில்லை என்றால் அவனது தலையெழுத்து சரியில்லை என்பதே பொருள். ஒரு மனிதனின் ஜாதகத்தைக்கொண்டு அவனது தலையெழுத்தைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். ஜாதகம் அமைவது என்பது அவரவர் பூர்வ ஜென்ம வினையே ஆகும். பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா என்று ஜாதகம் எழுதுவதற்கு முன்னால் ஒரு ஸ்லோகத்தை எழுதியிருப்பார்கள். அதன் பொருளும் இதுவே.

ஆக ஒவ்வொரு மனிதனுக்கும் தலையெழுத்து என்பது நிச்சயமாக உண்டு என்பதே ஆன்மிக அறிவியல் ஆன ஜோதிடம் சொல்லும் உண்மை.