இறைவனை ஸ்தூல வடிவில் காண்பதுதான் தரிசனமா? எங்கெல்லாம் இறைவன் இருக்கிறான் என்று பாருங்கள்.

த்ருச்’ எனில் பார்த்தல், தரிசனம் எனில் இறைவனின் சக்தி உறைந்திருக்கும் இடங்களில் எல்லாம் அவரை தரிசித்து, இறை அனுபூதியைப் பெற்று நம்முடைய உண்மை நிலையினை அறிதல்.


சிவாகமங்கள் சிவலிங்கத் திருமேனியை மட்டுமல் லாது, கொடிமரம் பலிபீடம் போன்றவற்றையும் சூட்சும லிங்கம், ஸ்தூல லிங்கம், பத்ர லிங்கம் என்று பெயர்களிட்டு விளக்கியுள்ளது. ‘விகதம் மானம் விமானம்’ என்பதற்கேற்ப, கோயிலின் உள்ளே இருக்கக்கூடிய இறை ஆற்றல் விமானங்களின் மூலம் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சென்றடையும். ஆகவே விமான தரிசனம் விசேஷமானது. அதேபோல், ராஜகோபுரம் இறைவனின் பாதகமலங்களாக விளங்குவதால், கோபுர தரிசனமும் உயர்வானது.

கடல், நதிகள், மரங்கள், மலைகள் போன்று பல முக்கியமான இடங்களை நம் ஆகமங்கள் குறிப்பிட்டு, அங்கெல்லாம் இறையருள் சக்தியைப் பெறுவதற்கு வழிகாட்டி இருக்கின்றன. இது நம் மதத்தின் தனித்துவம்.

திருவண்ணாமலையில் எல்லாம்வல்ல சிவபெருமான், தம் தேவியுடன் மலையுருவில் எழுந்தருளியிருப்பதாக ஸ்கந்த புராணம் போன்றவற்றில் விவரிக்கப்பட்டுள்ளது. நம் சைவ சமயக்குரவர்கள் நால்வர், தற்காலத்தில் சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகிராம்சுரத்குமார் சுவாமிகள் மற்றும் பல சித்தர்கள் மலையுருவில் அருள்பாலிக்கும் அம்மையப்பரால் ஸித்தி பெற்றவர்கள் என்பது வரலாறு.

இன்றும் பல பக்தர்கள் மலையுருவில் இருக்கும் இறைவனை வலம்வந்து வழிபட்டு வருவது அனுபவ உண்மை. மின்சாரம் ஒன்றாக இருந்தாலும் அதன் ஆற்றலை நாம் பல வகைகளில் பெறுவதைப்போல் இறையருளையும் பல நிலைகளில் பல வடிவங்களில் பெறலாம்.